தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உலா வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என பல வெற்றிப் படங்களைத் தந்த மாரி செல்வராஜ் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் பைசன். 

பைசன் ரிலீஸ் எப்போது?

பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மாலை அறிவிப்பு வெளியானது. பைசன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியாக உள்ளது என்று இன்று படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். 

வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி வெளியீடாக பைசன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இதுதொடர்பாக, இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தீப்பிடித்து எரியும் வனத்திற்குள்ளிருந்து தீப்பிழம்பாய் தீபாவளிக்கு வருகிறான் தெக்கத்தி காளமாடன் என்று பதிவிட்டுள்ளார். 

கபடி வீரரின் வாழ்வு:

கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளனர். லால், பசுபதி, ரஜீஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள், கலையரசன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அவருடன் இணைந்து தீபக் சேகல், அதிதி ஆனந்த் தயாரித்துள்ளனர். எழிலரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி திரு எடிட்டிங் செய்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார்.

துருவ் விக்ரமிற்கு கம்பேக்கா?

படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றியே நடைபெற்றது. துருவ் விக்ரம் இந்த படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அளவில் உலா வருவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

மாரி செல்வராஜின் படங்களில் காணப்படும் சமூக சாதிய பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது.