'ராஞ்சனா', 'ஷமிதாப்' உள்ளிட்ட படங்களில் நடித்த தனுஷ் மீண்டும்  'அட்ராங்கி ரே'படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் இவருடன் அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படம் வரும் 24 ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ்  'அட்ராங்கி ரே' படம் குறித்தும், இன்ன பிற விஷயங்கள் குறித்தும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.




ஹிந்தியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஷமிதாப் படத்தில் நடித்தீர்கள்? கிட்டதட்ட ஆறு வருடங்கள் ஆகி விட்டது.. ஏன் இவ்வளவு இடைவெளி? 


நான் தமிழில் ஏராளமான படங்களில் நடிக்கிறேன். அதனால்தான் இந்த இடைவெளி. இன்னொன்று எல்லாமும் கூடி வர வேண்டும் இல்லையா.. நல்ல கதை கிடைக்க வேண்டும், நல்ல டைரக்டர் கிடைக்க வேண்டும், அந்த நேரத்தில் எனது டேட்ஸ் ஃப்ரியாக இருக்க வேண்டும்.




ஆனால் அட்ராங்கி ரே படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த போது ஹிந்தியில் நான் இன்னும் அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். 


‘ஷமிதாப்’ போன்ற மாற்று சினிமாவில் நடித்து விட்டு   ‘அட்ராங்கி ரே’ போன்ற படத்தில் நடித்திருக்கிறீர்கள். ஆனந்த எல் ராய் - க்காகத்தான் ஒத்துக்கொண்டீர்களா? 


நான் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு காரணம் ஹிமான்ஷு சர்மாவும், ஆனந்த் எல் ராயும்தான். நான் இந்தப் படத்தில் கமிட் ஆவதற்கு இந்த இரண்டு பெயர்கள் போதுமானது.   ஹிமான்ஷு இந்தக் கதையை என்னிடம் சொன்ன போது, நான் ஏன் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் அவர்கள் விரும்பினார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இது ஒரு அழகான கதை. 




 


ஆனந்த் எல் ராய், இங்கு என்னை யாருக்கும் தெரியாத நேரத்தில் என் மீது மிகவும் நம்பிக்கை வைத்தவர். ராஞ்சனா படத்தின் போது அந்தப் படத்தில் என்னை மட்டுதான் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். அந்த அளவுக்கு அவர் மீதும் அவரின் கதைகள் மீதும் அவருக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. 


நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர் எல்லா பரிணாமங்களிலும் இருக்கிறீர்கள்? எப்படி எல்லாவற்றையும் செய்ய நேரம் கிடைக்கிறது? 


இதில் எந்த ஒன்றையும் நான் ஒழுங்காக செய்வதில்லை. இவை எல்லாவற்றிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது.  அதனால்தான் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் செய்கிறேன். இதில் சிலர் பிரமாதமாக வேலை செய்திருக்கிறார்கள். அது பிறருக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். இது நீங்கள் உங்களது வேலையில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. எனக்கு கலை மீது அதிக ஆர்வம் இருக்கிறது. அதில் எப்போதுமே என்னுடைய பெஸ்டை கொடுக்க முயற்சிக்கிறேன். 


முந்தைய நேர்காணல் ஒன்றில், ஆரம்பத்தில் காலத்தில் நடிக்கும் போது மிகவும் தயக்கமாக இருந்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள்.. தற்போது அந்த நிலை மாறியிருக்கிறதா? நீங்கள் செய்வதிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? 


எழுதுவதையும், டைரக்ட் செய்வதையும் நான் அதிகமாக விரும்புகிறேன். நான் நடிப்பை சீரீயஸாக எடுத்துக் கொண்டதே  இயக்குநர் பாலுமகேந்திராவை சந்தித்த பின்னர் தான். 19 வயதில் நான் அவரை சந்தித்தேன். அப்போது எங்களுக்குள் இதயப்பூர்வமாக உரையாடல்கள் நடந்தன. அவர்தான் எனக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை என்னையே உணரவைத்தார்.





அதுவரை என்னில் நான் அதை பார்த்ததில்லை. பாலுமகேந்திரா போன்ற நபரிடம் இருந்து அது வருகிறது என்றால், அதை நீங்கள் கட்டாயமாக சீரியஸாக எடுத்தாக வேண்டுமல்லவா.. அதன் பின்னர்தான் நான் கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன். கடந்த 10 வருடங்களாக மகிழ்ச்சியாக அதை செய்து வருகிறேன். 


நீங்கள் டைரக்‌ஷன்தான் மிகவும் பிடிக்கும் என்கிறீர்கள்?  பிறரின் டைரக்‌ஷனில் நடிக்கும் போது,பர்சனலாக உங்களை எப்படி அடக்கி வைத்து கொள்ள முடியும்? 


அது ஒன்றும் அவ்வளவு சவாலனது அல்ல. நான் வாயை மூடிக் கொள்வேன். நீங்கள் உங்களது வேலையை மகிழ்ச்சியாக செய்தால் போதும். இது ஒரு குழந்தை வீடியோ கேம் விளையாடுவது போலதான். குழந்தை விதவிதமான வீடியோ கேம்களை விளையாடினாலும் அனைத்தும் அதுக்கு பிடித்தமானதாக இருக்கும் இல்லையா..