நடிகர் தனுஷ் மிருணாள் தாகூரை வைத்து புது படத்தை இயக்கவிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தனுஷ் இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். அடுத்த சில வருடங்களுக்கு தொடர்ச்சியாக நடிக்க இருப்பதால் புதிய படங்கள் எதுவும் தான் இயக்கப்போவதில்லை என தனுஷ் கோயம்புத்தூரில் நடந்த கர படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார்
தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜூ , சூரஜ் வெஞ்சரமூடு , கருணாஸ் , ஜெயராம் , கே.எஸ் ரவிகுமார் ஆகிய பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சென்னையில் கர படத்தின் இசை வெளியீடு நடந்ததைத் தொடர்ந்து நேற்று கோயம்புத்தூரில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ் பேசியபோது தான் அடுத்த சில வருடங்களுக்கு படங்களை இயக்கப்போவதில்லை என தெரிவித்தார்.
" மூன்று இயக்குநர்கள் கதைகளுடன் எனக்காகப் பொறுமையாகக் காத்திருக்கிறார்கள். நான் முதலில் ராஜ்குமார் பெரியசாமி படத்தின் படப்பிடிப்பை முடிக்க வேண்டும்.. பிறகு மாரிசெல்வராஜின் படத்தில் நடிக்க வேண்டும்.. இடையில், லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் படம் இருக்கிறது.. பிறகு நான் வடசென்னை2-ஐ முடிக்க வேண்டும். வடசென்னை 2-ன் காலக்கெடு எப்போது வரும் என்று இப்போது உங்களுக்குத் தெரியும்.. எனவே, இவை அனைத்தையும் முடிக்க எனக்குச் சில வருடங்கள் தேவைப்படும். அதன் பிறகுதான் நான் இயக்கம் பற்றி யோசிக்க முடியும்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
பவர் பாண்டி படத்தின் மூலம் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ராயன் , நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் , இட்லி கடை ஆகிய படங்கள் வெளியாகின. தனுஷ் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினாலும் அவர் இயக்கிய படங்களுக்கு தனுஷ் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இல்லை . இப்படியான சூழலில் தான் தனுஷ் மிருணாள் தாகூரை வைத்து புது படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி கொடுத்தது. அடுத்த சில வருடங்களுக்கு தான் படமியக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. அடுத்த சில வருடங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தனுஷின் நடிப்பை பார்க்கலாம் மக்களே
