நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘மாரி’ படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பாலாஜிமோகனுடன் கூட்டணி வைத்த தனுஷ்
குறும்படங்கள் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி? படத்தின் மூலம் இயக்குநரானவர் பாலாஜி மோகன். அடுத்ததாக இவர் இயக்கிய வாயை மூடி பேசவும் படமும் வித்தியாசமான கதையமைப்பால் ரசிகர்களை கவர்ந்தது. இவரின் 3வது படமாக உருவானது தான் “மாரி”. இந்த படத்தில் தனுஷ் நடிக்கப் போகிறார் என்ற போது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த படத்தில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் இப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். மேலும் ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத், காளி வெங்கட் என ஏகப்பட்ட பேர் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். மாரி படத்தில் பாடல்களை தனுஷ், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
படத்தின் கதை
புறா பந்தயத்தில் ஆர்வம் கொண்ட தனுஷ், தனது பகுதியில் புறா பந்தயங்களை நடத்துவதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அந்த இடத்துக்கு வருவதற்கு முயற்சிக்கிறார் மைம் கோபி. இவர் அந்தப் பகுதியின் காவல் நிலையத்துக்குப் புதிய இன்ஸ்பெக்டராக வரும் விஜய் யேசுதாஸூடன் கூட்டணி அமைக்கிறார். இவர்கள் திட்டமிட்டு மாரியை ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள். அவருடைய இடத்தைப் பிடிக்கிறார்கள். திரும்பி வரும் மாரி இழந்ததை மீட்டாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.
இந்த படத்திற்கு பெரும்பலமாக அமைந்தது கதையோ, காட்சிகளோ இல்லை. அனிருத் தனுஷூக்கு போட்ட பின்னணி இசைதான். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ஏதோ இண்ட்ரோ சீன் போல மியூசிக் தெறிக்க விட்டிருந்தார். வழக்கமான மசாலா கதையை தனுஷூக்கு ஏற்றவாறு செய்திருந்தார் பாலாஜி மோகன். கலவையான விமர்சனங்களைப் பெற்ற மாரி திரைப்படம் வசூலில் சூப்பரான சாதனைப் படைத்தது.
தரை லோக்கல் பாய்ஸ் என்னும் பெயரில் தனுஷின் அறிமுகப்பாடல் இப்போது கேட்டாலும் ஆட்டம் போட வைக்கும். இதில் கிட்டதட்ட ஒரு நிமிடம் நான் ஸ்டாப்பாக தனுஷ் ஆடியிருப்பார். இந்த படம் சர்ச்சையிலும் சிக்கியிருந்தது. படத்தில் தனுஷ் அதிகமாக புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்திருந்தார். இதற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்,
இந்தப் படத்தில் தனுஷ் அணிந்திருந்த ஆடைகள், அணிகலன்கள், கண்ணாடி ஆகியவை ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தின் வெற்றியால் 2018 ஆம் ஆண்டு மாரி படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.