முதலில் கேங்ஸ்டர்ஸ்…


கேங்ஸ்டர்களுக்கு எப்போதும் ஒரே வேலைதானே. ஒரு தலைவன் இருப்பார். ஆயுதம், போதைப்பொருள் கடத்துவார்கள். கோட் போட்டிருப்பார்கள். சாலைகளில் தலைவர் முன்னால் செல்ல, நான்குபேர் பின்னால் வர, குறுக்கும் நெடுக்குமாக நடப்பார்கள், சுருட்டு பிடிப்பார்கள், ஆட்கடத்தல் பண்ணுவார்கள், பெட்டி பெட்டியாக பணம் வைத்திருப்பார்கள். இருட்டான பகுதிகளில் மறைந்திருந்து டூமீல், டுமீல் என சுட்டுக்கொண்டு செத்துப்போவார்கள். ஆமாம் இந்த படத்தில் எல்லாம் வருகிறது.


இந்த படத்திலும் ஒன்றுக்கும் இரண்டு கேங்ஸ்டர் குழுக்கள் வருகின்றன. ஒன்று லண்டன் குழு. இதில் எல்லோருமே ஆங்கிலேயர்கள். ஒரே இங்கிலிஸ். இன்னொரு குழுவும் லண்டன் குழுதான். இதில் எல்லோருமே தமிழர்கள்… சாதா தமிழர்கள் கிடையாது ஈழத்தமிழர்கள். இங்குதான் கேங்ஸ்டர் படத்தில் அரசியல் வருகிறது.


நாட்டிலிருக்கும் அகதிகளை வெளியேற்ற வேண்டும் எனவும், புதிதாக அகதிகளை உள்ளே அனுமதிக்க கூடாது எனவும் சதி திட்டம் தீட்டுகிறார் வெள்ளை கேங்ஸ்டர் பீட்டர். கஷ்டப்பட்டு பல கொலைகள் செய்து, ஆயுதங்கள் கடத்தி தங்கம் கடத்தி அகதிகளுக்கு குடியுரிமை வாங்கித்தர போராடுகிறது ஈழத்தமிழ் கேங்ஸ்டர் சிவதாஸ்.




வெவ்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகளை வல்லாதிக்க நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? கூடாதா? என்கிற விவாதம்தான் படமென்று நினைக்கலாம். அங்கதான் ட்விஸ்ட்.


படம் மதுரைக்கார இந்தியனான சுருளியைப் பற்றியது.


தன் ஊரில் மற்ற மொழி பேசுகிற வந்தேறிகள் கடை போடக்கூடாது என்பதற்காக கோபம் கொண்டு கொந்தளிக்கிறார் சுருளி. 


கொலையெல்லாம் செய்கிற மதுரை ரவுடி சுருளி. மதுரைனாலே ரவுடிகள்தானே வாழ்கிறார்கள். வைகை ஆத்துல தண்ணியா ஓடுது ரத்தம்தாண்ணே ஓடுது..


இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு மதுரைக்காரர்களை இப்படி முழுநேர ரவுடிகளாக தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்துவார்கள் என தெரியவில்லை. அங்கே பல ஐடி கம்பெனிகள் எல்லாம் வந்துவிட்டன. போகுது இதைப்பற்றி மதுரைக்காரர்கள்தானே பொங்கவேண்டும்.




இந்த மதுரை ரவுடி சுருளி சமயசந்தர்ப்பங்களால் லண்டனுக்கு செல்ல நேரிட, பீட்டருக்கும் சிவதாஸுக்கும் நடுவில் கேம் ஆட,  இறுதியில் அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கிறார். ஆமாம் அப்படிதான் ஆகிறது. எப்படி என்பதெல்லாம் இரண்டேமுக்கால் மணிநேரம் பார்த்தால் புரியும். இதற்கு நடுவில் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொலை செய்வது, ஈழத்தின் இறுதி யுத்தத்தில் இந்தியா கைவிட்டது, தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவார் என ஆயுதங்களோடு காத்திருக்கும் லண்டன் அகதிகள் என சமகால அரசியல் என்கிற பெயரில் 12 ஆண்டுகளுக்கு முந்தைய அரசியல் நிலைகளும் காட்டப்படுகிறன்றன!


கதைக்குதானே.. போகுது என விட்டுவிடலாம். அங்குதான் சிக்கலே.


படத்தின் முதல் காட்சியிலேயே லண்டனின் முக்கியமான சாலையில் ஈழத்து அகதிகள் சேர்ந்து ஒரு காரில் குண்டுவைத்து ஒருவனை கொலை செய்கிறார்கள். ஈழத்து அகதிகள் லண்டனில் உட்கார்ந்து கொண்டு அங்கே ஆயுதக்கடத்தல் பிஸினஸ் பண்ணுகிறார்கள். லண்டனில் ஆயுதக்கடத்தல் பண்ணுகிற ஈழத்து அகதிகள், நாங்கள் தீவிரவாதிகள் அல்ல புரட்சியாளர்கள் போராளிகள் என்கிறார்கள்.


ஈழத்து அகதிகள் எதிர்காலத்தில் சிங்களர்களோடு சண்டையிடலாம் என்று லண்டனில் தங்களுடைய கடைகளில் வீடுகளில் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள். ஈழத்து அகதிகள் படம் முழுக்க கைகளில் துப்பாக்கி வைத்துக்கொண்டு பொது இடங்களில் சுற்றுகிறார்கள். ஈழத்து அகதிகள் சட்டவிரோதமாக லண்டனில் மறைந்து வாழ்வதோடு தடை செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை சப்ளை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.




இதில் முக்கியமானது ஈழத்திலிருந்து வரும் அகதிகள் தங்களுடைய வாழ்வுரிமைக்கான வழக்குகளை நடத்த சிவதாஸ் கும்பல்தான் காசு கொடுப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எத்தனையோ பேர் சாதாரண வேலைகள் பார்த்து சிறுக சிறுக காசு சேர்த்து சம்பாதித்து நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலவரம்!


நிஜமாகவே அகதிகள் படும் வேதனைகளை அவர்களை வல்லாதிக்க நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறையிருந்தால் இப்படியெல்லாம் ஒருவரால் காட்சிப்படுத்த முடியுமா? லண்டன் அரசாங்கமோ கனடா ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்கள் என்ன மண்ணாங்கட்டியா…? இதுமாதிரியான படங்கள் என்ன மாதிரியான கருத்தை பரவலாக மக்களிடையே, குறிப்பாக சர்வதேச மக்களிடையே கொண்டு சேர்க்கும்? ஏற்கனவே ஈழத்து அகதிகள் மீது தீவிரவாதிகள் என்கிற முத்திரை குத்தப்பட்டு அச்ச உணர்வோடுதான் உலக மக்கள் அணுகுகிற வேளையில், இதுமாதிரியான ஒரு அரைவேக்காட்டு படம் என்னமாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும். இது அந்த மக்களுக்கு பாதகமாக முடிந்திடாதா..? ஜெர்மனியிலிருந்தும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஈழத்தமிழர்களை தாய்நாட்டிற்கே திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசாங்கம் முயற்சி மேற்கொள்ளும் காலத்தில் அதை எதிர்த்து ஈழத்து மக்களெல்லாம் போராடிக்கொண்டிருக்கிற நேரத்தில்… இப்படி ஒரு படம்!


உண்மையில் லண்டனில் வாழும் ஈழத்து அகதிகள் இந்தப்படத்தை பார்த்தால் கார்த்திக் சுப்பராஜை அடித்து நொறுக்கிவிடுவார்கள். விளையாட்டுக்கு சொல்லவில்லை. நிச்சயமாக அடித்து நொறுக்கிவிடுவார்கள். அவ்வளவு ஆத்திரத்தை உண்டு பண்ணக்கூடிய படம் இது. அந்த அளவுக்கு இது அம்மக்களை கொச்சைப்படுத்துகிறது.


இயக்குநருக்கு தன் சொந்த நிலங்களில் இருந்து வாழவழியற்று புலம்பெயர்ந்து பலநாடுகளிலும் தவிக்கும் தமிழ் ஈழ அகதிகள் பற்றியும், அவர்கள் படும் வேதனைகளை பற்றியும் படமெடுக்க வேண்டும் என்கிற ஆசை இருந்திருக்கலாம். வெள்ளை ஆதிக்கம் எப்படி புலம்பெயர்ந்த அகதிகளை வெளியேற்ற துடிக்கிறது என்பதை ஆவணப்படுத்த ஆசைப்பட்டிருக்கலாம்.


ஆனால், அதை எப்படி சொல்கிறோம் என்பது மிக முக்கியம். அரசியல் அறிவும் தெளிவும் இல்லாமல் பல லட்சம் அகதிகளின் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குகிற இதுபோன்ற சர்வேதச பிரச்சனைகளை கவனமாக கையாள வேண்டும். ஆனால் கார்த்திக் சுப்பராஜூ அனைத்தையும் ரொம்பவே தமாசாக கையாண்டிருக்கிறார். அவருடைய நாயகன் சுருளிக்கு எல்லாமே தமாசாகத்தான் இருக்கிறது. ஏராளமான கொலைகள் செய்துவிட்டு ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இந்திய போலீஸோ, லண்டன் போலீஸோ எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் அவர் சுருளி இல்லையா.!




தமிழ் சினிமாவின் புதிய ட்ரெண்ட் என்ன தெரியுமா…? நாயகன் முற்போக்கு அரசியல் பேசுவது. அதோடு பல்லாண்டுகளாக நீடிக்கிற சமூகப்பிரச்சனைகளை தன்னுடைய ஹீரோயிசத்தால் தீர்த்துக்கொடுப்பது. அது எவ்வகை அரசியலாக இருந்தாலும் நம் நாயகன்களுக்கு அந்த அரசியலின் பின்புலமோ நீண்ட வரலாறுகளோ அவசியமில்லை. அதற்காக நடந்த தொடர்ச்சியான போராட்டங்களோ கண்ணீரோ துயரங்களோ அவசியமில்லை. அரிவாளை எடுத்து நறுக் நறுக் என கழுத்தை அறுத்துவிட்டாலோ துப்பாக்கி எடுத்து எல்லோரையும் டுப்டுப்பு என சுட்டுத்தள்ளிவிட்டாலோ தீர்வு கிடைத்துவிடுகிறது. நாமும் கையை தட்டிவிட்டு “அப்பாடா…! பல்லாண்டு கால பிரச்சனையை எவ்ளோ ஈஸியா முடிச்சிட்டாப்ல” என கைதட்டிவிட்டு வந்து விடுகிறோம். யதார்த்த நிலை அப்படி எளிதானதல்ல.


போர் முடிந்து பனிரெண்டு ஆண்டுகளாகியும் இலங்கையில் வாழும் தமிழரும், வெளிநாடுகளில் அகதிகளாக புலம்பெயர்ந்த தமிழர்களும் கொடுமைகளைத்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மால் நல்லது செய்ய முடியவில்லை என்றாலும்… இப்படி படமெடுத்து கஷ்டப்படுத்திவிடக்கூடாது.