தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக தயாராக இருந்த 'வாத்தி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. 


 




கேப்டன் மில்லர் படப்பிடிப்பு ஒத்திவைப்பு :


தமிழ் மற்றும் தெலுங்கில் டிசம்பரில் வெளியாக இருந்த 'வாத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வந்தார் நடிகர் தனுஷ். மிகவும் மும்மரமாக தென்காசி மற்றும் கேரளாவின் வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. ஆக்ஷன் கலந்த வரலாற்று திரைப்படமான 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு மழை காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அதிவேகமாக நடைபெற்று வந்த ஷூட்டிங் பணிகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தனது அடுத்த படத்தின் பூஜையில் சுறுசுறுப்பாக இறங்கிவிட்டார் நடிகர் தனுஷ். 


 






 


அடுத்த படத்தின் பூஜைக்கு ரெடியான தனுஷ் :


ஹேப்பி டேஸ், டாலர் ட்ரீம்ஸ், லைஃப் இஸ் பியூட்டிபுல், லவ் ஸ்டோரி போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய சேகர் கம்முலா இயக்கத்தில் முதல் முறையாக தனுஷ் கூட்டணி சேரவுள்ளார் எனும் தகவல் ஏற்கனவே வெளியானது. கேப்டன் மில்லர் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் பூஜையை நடத்திவிட திட்டமிட்டு இன்று பூஜையை நடத்தினர். தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். 


 


ஹைதராபாத்தில் நடைபெற்ற பூஜை :


தனுஷ் - சேகர் கம்முலா காம்போவில் உருவாகவுள்ள இப்படம் ஒரு அரசியல் சார்ந்த திரைப்படம் என பேசப்படுகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்  என கூறப்படுகிறது. மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் அரசியல் பின்னணி கொண்ட திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. விரைவில் இப்படம் குறித்த மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 






 


சிறப்பான ஆண்டு :


இந்த ஆண்டு நடிகர் தனுஷ் திரை வாழ்வில் ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அவர் நடிப்பில் நேரடியாக அத்ராங்கி ரே, தி கிரே மேன் மற்றும் மாறன் திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வகையில் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படம் இரண்டுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று திருப்பிதியை கொடுத்தன. இந்த ஐந்து படங்களை தொடர்ந்து டிசம்பர் மாதம் வெளியாகவிருந்த 'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.