பல இரவு இளையராஜாவாக நடிக்க நினைத்து தூக்கம் தொலைத்துள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், நடிப்பு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும்  தனுஷ் இயக்குகிறார். 


இதற்கு நடுவில் தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், தன்னுடைய வாழ்க்கையில் இளையராஜாவின் நிலை பற்றி நெகிழ்ச்சியாக பேசினார். 






அதாவது, “எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நான் நாம் ரொம்ப நம்புறேன், அடிக்கடி சொல்றேன். நம்மில் பலபேர் இரவில் தூக்கம் இல்லையென்றால் இளையராஜாவின் பாட்டு கேட்டுவிட்டு மெய்மறந்து தூங்குவோம். ஆனால் நான் பல இரவு இளையராஜா சாராக நடித்தால் எப்படி இருக்கும்ன்னு நினைச்சி என் மனசுல நடிச்சி நடிச்சி தூக்கம் இல்லாமல் பார்த்துகிட்டே இருந்துருக்கேன். நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.


ஒன்று இசைஞானி இளையராஜா, இன்னொன்னு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடையது. ஒன்னு நடக்குது. இந்த வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு நினைக்கிறது எனக்கு மிகப்பெரிய கர்வத்தை கொடுக்கிறது. நான் இளையராஜாவின் ரசிகன், பக்தன். அவரின் இசை தான் எனக்கு துணை. இது அனைவருக்கும் பொருந்தும். அவரது இசை எனக்கு நடிப்பு ஆசானாகவும் இருந்துள்ளது.


எனக்கு நடிப்புன்னா என்னன்னு தெரியிறதுக்கு முன்னாடியும், இப்பவும் சரி ஒரு காட்சியை படமாக்கும் முன் அந்த காட்சிக்கு தகுந்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய இளையராஜாவின் பாடலையோ அல்லது பின்னணி இசையையோ கேட்பேன். அந்த இசை அந்த காட்சியை எப்படி நடிக்கணும் என எனக்கு சொல்லும். வெற்றிமாறன் இதை ஒரு சில நேரம் பார்த்திருக்காரு. இளையராஜா கேரக்டரில் நடிப்பது மிகப்பெரிய சவால். மிகப்பெரிய பொறுப்பு” என தனுஷ் தெரிவித்துள்ளார்.