நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான சுள்ளான் படம் வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


ஆக்ஷன் ஹீரோ அவதாரம்:


துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், திருடா திருடி என பல படங்களில் நடித்தாலும் தனுஷ் ஆக்‌ஷன் காட்சிகளில் முதல் முறையாக நடித்தது என்னவோ ‘சுள்ளான்’ படத்தில் தான். ஒல்லியான தேகத்தை வைத்துக் கொண்டு அவர் பேசிய பன்ச் டயலாக்குகள் இன்றைக்குப் போல சமூக வலைத்தளங்கள் இருந்திருந்தால் கிழித்து தொங்க விட்டு இருப்பார்கள். அப்படி அந்த வயதிலேயே அப்படி ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக முயற்சித்தார் தனுஷ்


‘சுள்ளான்’ ஆக கொண்டாடப்பட்ட தனுஷ்


2004 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ரமணா எழுதி இயக்கியிருந்தார். சுள்ளான் படத்தில் தனுஷ், சிந்து துலானி, பசுபதி, மணிவண்ணன், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. ஆனால் படத்தில் இடம்பெற்ற பன்ச் வசனங்கள் ரசிகர்கள் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டது.


படத்தின் கதை 


நண்பர்களிடையே சுள்ளான் என்று அழைக்கப்படும்  தனுஷ், ஒரு பிரச்சினையில் சூரியுடன் மோதுகிறார். இதனால் தனுஷின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனை தனுஷ் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. தமிழ் சினிமாவில் சலித்து எடுத்த கதை என்றாலும் ஆக்‌ஷன் ஹீரோவாக தனுஷை இப்படம் முன்னிறுத்தியது என்றே சொல்லலாம். பசுபதியும் வித்தியாசமான வில்லனாக மிரட்டியிருந்தார். படம் நெடுகிலும் இவர்கள் இருவரும் ஹீரோயிசம் காட்டுகிறேன் என்கிற பெயரில் கத்தி காட்டுவது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம். 


கவனம் பெற்ற பாடல்கள் 


இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில், அறிவுமதி, பா.விஜய், கபிலன், நா. முத்துக்குமார் மற்றும் யுகபாரதி ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதினர். பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதில் தனுஷின் அறிமுக பாடலுக்கு நடிகை சங்கவி நடனமாடியிருப்பார். 


பட்டையை கிளப்பிய பன்ச் வசனம் 


‘பார்க்கிறதுக்கு சுள்ளான்.. சூடானேன் சுளுக்கெடுத்துவன்’ என தனுஷ் பேசும் பன்ச் வசனம் அந்த காலக்கட்டத்தில் மிகப் பிரபலமாக மாறியது.  தனுஷ் மக்கள் மத்தியில் பிரலமாக அன்றைய நிலைமைக்கு இந்த வசனம் மிகப்பெரிய காரணமாக அமைந்தது.   திருமலை படத்தை இயக்கிய ரமணா இப்படத்தை இயக்கிய நிலையில், படம் தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.