சேலஞ்சிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது காதலியுடன், ஒரு கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை மைசூருவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காமாட்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மருந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ரேணுகா சுவாமியின் உடல் என்றும், காமட்விபாளையாவில் உள்ள மழைநீர் வடிகாலில் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். முதலில் ரேணுகா சுவாமி தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணிய காவல்துறை பிறகு விசாரணையில் கொலை செய்யப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர்.
நடிகர் தர்சனுக்கும் கொலைக்கும் என்ன தொடர்பு:
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகா சுவாமி, நடிகை பவித்ரா கவுடாவுக்கு தனிப்பட்ட முறையில் தகாத செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஏற்கனவே திருமணமான தர்ஷனும் நடிகை பவித்ரா கவுடாவும் காதலித்து வந்ததாக தெரிகிறது. நடிகை பவித்ரா கவுடாவுக்கு தொடர்ந்து ரேணுகா சுவாமி இத்தகைய குறுஞ்செய்தி அனுப்பியதால், கோபமடைந்த நடிகர் தர்ஷன் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 8ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். மேலும், அவரது உடலை ஜுன் 9ஆம் தேதி உள்ளூர்வாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரேணுகாவின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தடயவியல் அறிக்கையில் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து, ரேணுகா சுவாமியை கொலை செய்தது தொடர்பாக சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தர்ஷனை முன்னதாக காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தர்ஷன் வசிக்கும் கேரேஜில் இருந்து ஆயுதங்கள் கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தர்ஷனுடன் அவரது காதலியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து நடிகர் தர்ஷன் கொலையில் நேரடியாக ஈடுபட்டாரா அல்லது சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்ஷன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர் தவிர்த்து மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மைசூர் ஆர்.ஆர்.நகரில் உள்ள தர்ஷன் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.