நடிகர் தனுஷ் தமிழ் திரை உலகிற்கு வந்து  21 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. அதனை சிறப்பிக்கும் வகையில் தற்போது அவர் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படகுழு இன்று மாலை சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட உள்ளார்.


கஸ்தூரி ராஜாவின் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகிய தனுஷ் இன்று இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் அறியப்படக்கூடிய நடிகராக இருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பாடகர்,இயக்குனர், தயாரிப்பாளர் என பல முனைகளிலும் சாதித்து வருகிறார். இந்த 21 ஆண்டில் நடிகர் தனுஷின் சாதனைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.


தேசிய விருது


 நடிகர் தனுஷ் 2011 ஆம் ஆண்டு அவர் நடித்து வெளியான ஆடுகளம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். ஆடுகளம் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன் என்பது நாம் நினைவுபடுத்த தேவையில்லை.


வை திஸ் கொலவெறி


தனுஷின் மனைவி ஐஷ்வர்யா தனுஷ் இயக்கிய 3 திரைப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாட்டு இடம்பெற்றது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி, அனிருத் இசையமைத்து தனுஷே பாடியும் இருந்தார். இந்தப் பாடல் உலகம் முழுவதும் டிரெண்டானது. முதல் முறையாக எம் டிவியில் ஒளிபரப்பான முதல் தமிழ்ப்பாடல் கொலவெறிப் பாடல்தான். நூறு மில்லியன் வியூஸைக் கடந்த முதல் தமிழ்ப் பாடலாக கொலவெறி இருப்பது அதன் மற்றுமொரு சாதனை.


தயாரிப்பாளருக்கான தேசிய விருது


2014 ஆம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை திரைபடத்திற்காக சிறந்த படத்திற்கான விருதை அதன் தயாரிப்பாளரான தனுஷ் பெற்றுக்கொண்டார். இந்த படத்தை தயாரிக்க தனுஷிடம் கேட்டுக்கொண்டது வெற்றிமாறன். அவர் சொல்லிய ஒரே காரணத்திற்காக தனுஷ் இந்த படத்தை தயாரித்தார்.


பாலிவுட்டில் எண்ட்ரி


2013 ஆம் ஆண்டு தனுஷிற்கு பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராயிடமிருந்து நடிப்பதற்கு அழைப்பு வந்தது. ராஞ்சனா என்கிற படத்தில் மூலமாக தனுஷ் ஹிந்தி சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷின் நடிப்பு அவருக்கு பாலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுதந்தது. இதற்கடுத்ததாக பால்கி இயக்கிய ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சனுடன் தனுஷ் சேர்ந்து நடித்தார் என்பது கூடுதல் தகவல்.


அடுத்து ஹாலிவுட்


வெகு சில இந்திய நடிகர்களே ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க அழைக்கப் பட்டிருக்கிறார்கள். இர்ஃபான் கான், அமிதாப் பச்சன் என விரல் விட்டு என்னி விடலாம். அந்த வரிசையில் இணைந்தார் தனுஷ். பக்கிரி என்கிற ஹாலிவுட் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்தார் தனுஷ். இதற்கடுத்து ரூஸோ சகோதரர்கள் இயக்கிய தி கிரே மேன் படத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ரயன் கோஸ்லிங் உடன் இணைந்து நடித்தார் தனுஷ்.


மீண்டும் தேசிய விருது


வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படத்தில் மக்களால் கொண்டாடப் பட்டது. அவரின் நடிப்பிற்கு சாட்சியமாக இரண்டாவது முறையாக தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப் பட்டது.


 நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர்  படத்தில் நடித்து வருகிறார். அவர் தொட்டதெல்லாம் தங்கமாகிறது. அவர் திரைப்பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.


கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தி என்பது குறிப்பிடத்தக்கது.