கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான மகான் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி தகவல் கொடுத்துள்ளார் நடிகர் விக்ரம்.


மகான்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் மகான். விக்ரம் ,துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கொரோனா நோய்த் தொற்று காரணமாக இப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியது. சமீபத்தில் இப்படம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது.


தயாரிப்பாளரை திட்டிய விஜய்


முன்னதாக மகான் படம் குறித்து தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவிக்கையில், மகான் படத்தைப் பார்த்த நடிகர் விஜய் தனக்கு ஃபோன் செய்து திட்டியதாகக் கூறினார். இப்படி ஒரு நல்ல படத்தை ஏன் ஓடிடியில் ரிலீஸ் செய்தாய் என்றும், திரையரங்கில் ரிலீஸ் செய்திருந்தால் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் என்றும் அதன் தயாரிப்பாளர் லலித் குமாரை விஜய் திட்டியுள்ளார். விஜய் திட்டிய பின்னர் தான், அந்த தவறை உணர்ந்ததாகவும் லலித் குமார் பகிர்ந்துகொண்டார். 


 நகைச்சுவை, கார்த்திக் சுப்பராஜ் ஸ்டைலில் அமைந்த காட்சிகள், சந்தோஷ் நாராயணன் இசையில் துள்ளலான பாடல்கள், துருவ் விக்ரம் மற்றும் விக்ரமுக்கு இடையிலான தந்தை மகன் மோதல் என திரையரங்கத்தில் பார்த்து ரசிக்கும் வகையிலான அனைத்துக் காட்சிகளும் இப்படத்தில் இருந்தன. தனுஷ் நடித்து முன்னதாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.


இதனைத் தொடர்ந்து வெளியான மகான் படத்திற்கு குறைவான வரவேற்பு இருந்தது என்றாலும், படம் வெளியானப் பின் படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஒரு நல்ல படத்தை திரையரங்கத்தில் மிஸ் செய்துவிட்டதாக வருத்தம் ரசிகர்களுக்கு இருந்தது.


மகான் 2






சமீபத்தில் மகான் படம் இரண்டு ஆண்டு கடந்ததை முன்னிட்டு ரசிகர்கள் படத்தைப்  பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். மேலும் மகான் படத்தை தாங்கள் எதிர்பார்த்து கார்த்திருப்பதாக அவர்கள் கூறினார்கள். இப்படியான நிலையில் நடிகர் விக்ரம், மகான் படத்தில் இதுவரை பார்த்திராத லுக் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் மகான் 2 என்று ஒரு கேள்விக்குறியையும் அவர் வைத்துள்ளார். இதன் மூலம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நிச்சயம் ‘மகான் 2’ படத்தை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்களுக்கு ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளார் விகரம்.


சியான் 62


நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 62ஆவது படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியது.  பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கி கவனமீர்த்த இயக்குநர் சு.அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். எச்.ஆர்.பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மாமனிதன், ஆர்.ஆர்.ஆர், டான், கேப்டன் உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்துள்ள இத்தயாரிப்பு நிறுவனம் மும்பைக்கார் மற்றும் தக்ஸ் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் விக்ரமுடன் எஸ்.ஜே சூர்யா இணைந்து நடிக்க இருக்கிறார்.