2025ஆம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் முன்னணி ஹீரோக்களின் படங்களை காட்டிலும் சிறு பட்ஜெட்டில் வெளியான படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் ஃபேமிலி, மெட்ராஸ் மேட்னி உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளன. ஆனால், விடாமுயற்சி, ரெட்ரோ, தக்லைஃப், இந்தியன் 2, கேம் சேஞ்சர், கூலி போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளன. சமீபத்தில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் தடுமாற்றத்தை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சறுக்கலை சந்திக்கும் ஸ்டார் ஹீரோக்கள்
முன்னணி கதாநாயகர்களின் படங்கள் அனைத்தும் வசூலில் மாஸ் காட்டினாலும் திரையரங்குகளில் உட்கார்ந்து ரசிக்கும் வகையில் இருப்பதில்லை என்பது தான் பலரது கருத்தாக இருக்கிறது. சமீபத்தில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று 100 கோடி வசூலை எட்டியுள்ளது. விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றிருக்கிறது.
சினிமாவை கன்ட்ரோல் செய்யும் ஓடிடி
இருப்பினும், தமிழ் சினிமா எதை நோக்கி பயணிக்கிறது என்ற சந்தேகம் வலுத்து வருவதாக நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் மனம் நொந்து தெரிவித்துள்ளார். டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தக்லைஃப், கூலி போன்ற படங்களுக்கு பெரிய ஹைப் கொடுத்தது ப்ரோமோஷன் தான். அதுதான் அந்த படத்திற்கு மிகப்பெரிய சறுக்கலை தந்திருக்கிறது. உண்மையில் இப்போது தமிழ் சினிமாவை மட்டும் அல்ல, இந்திய சினிமாவை ஓடிடி தளங்கள் தான் கன்ட்ரோல் செய்கின்றன. பெரிய ஹீரோக்களின் படத்தை ஓடிடி தளங்கள் காசு கொடுத்து பெற்ற பிறகு அவர்கள் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். இதுதான் தயாரிப்பாளர்களுக்கு தலைவலி ஏற்படுகிறது என சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.
சூர்யா, சிவகார்த்திகேயனுக்கு இந்த நிலையா?
மேலும் பேசிய அவர், இப்போது பெரிய தொகை போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஓடிடி தளத்தில் விற்பனை செய்வது தான் சவாலாக இருக்கிறது. சூர்யா நடித்த கருப்பு, சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி, கார்த்தி நடித்த சர்தார் 2போன்ற படங்கள் இன்னும் ஓடிடி-யில் விற்கப்படவில்லை. அதனால் தான் கருப்பு படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆகிறது. இதுமாதிரி நயன்தாரா நடித்த மண்ணாங்கட்டி, கவின் நடித்த கிஸ், ஆர்யா நடித்த மிஸ்டர் எக்ஸ் போன்ற பல படங்களை ஓடிடி இன்னும் வாங்கவில்லை என்ற புதிய தகவலை சித்ரா லட்சுமணன் அளித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் ஏமாற்றம்
மேலும், ஓடிடி தளங்கள் ஏன் படத்தை வாங்கவில்லை என்பதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களை சொற்ப விலைக்கே ஓடிடி தளங்கள் விலைக்கு கேட்பதால் தான் இந்த தாமதம் என சித்ரா லட்சுமணன் தெரிவிக்கிறார். 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தை குறைந்தது 60 அல்லது 70 கோடி கொடுத்து வாங்க ஓடிடி தளங்கள் முன்வந்தால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும். அடிமாட்டு விலைக்கு கேட்பதால் தயாரிப்பாளர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள் என அவர் தெரிவித்தார். அதேபோன்று நடிகர்களும் தங்களது சம்பள விசயத்தில் விட்டு கொடுத்து போனால் மட்டுமே சினிமா அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறும் என்றும் அவர் தெரிவித்தார்.