வாழ்க்கையில் தான் எல்லா விதமான பிரச்சினைகளையும் சந்தித்துள்ளதாக நடிகர் பாய்ஸ் மணிகண்டன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றி காணலாம். 


2003 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் குமார் என்ற கேரக்டரில் 5 ஹீரோக்களில் ஒருவராக மணிகண்டன் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு இன்றளவும் ரசிகர்களால் நினைவுக்கூறப்படும் அளவுக்கு அமைந்தது. இதனைத் தொடர்ந்து காதல் எஃப்.எம்., கிச்சா வயசு 16, யுகா  உள்ளிட்ட படங்களில் நடித்த மணிகண்டனுக்கு எந்த வாய்ப்பும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. 


இதனிடையே கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான “மகாராஜா” படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் மணிகண்டன் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் நடிக்க வேண்டும் என வேண்டி விரும்பியதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். மணிகண்டனை இனிமேல் அதிகமாக திரையில் பார்க்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன் மணிகண்டன் சில நேர்காணல்களில் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் தெரிவித்த விஷயங்கள் மீண்டும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. அதில், “பாய்ஸ் படத்துக்கு பிறகு காதல் எஃப்.எம்., கிச்சா வயசு 16, யுகா படங்களில் நடித்தேன். இதில் யுகா படத்தில் நடிக்கும் போது அப்பா இறந்தார். அப்பாவால் கடன் கொஞ்சம் அதிகமாகி விட்டது. அப்போது நான் சம்பாதித்தால் ஓரளவு கடன் அடைத்தேன். அந்த காலக்கட்டம் ரொம்ப கஷ்டமா தான் போச்சு. 


வாழ்க்கையில் நிறைய கஷ்டம், துயரம், ஏமாற்றம், தோல்வி தான் நான் அனுபவித்திருக்கிறேன். எல்லா வகையான பிரச்சினையையும் நான் சந்தித்து இருக்கிறேன். அதற்காக நான் வாழ்க்கை மீது பழி போட மாட்டேன். நான் ஒரு காலத்தில் பகலெல்லாம் குடித்துக் கொண்டிருந்தேன். கூடா நட்பில் இருந்ததால் அப்படி இருந்தது. 


நிறைய பேரை காதலித்து இருக்கிறேன். எனக்கு 42 வயதாகி விட்டது. நான் சரியாக இருக்கிறேனா என்பது தெரியவில்லை. எங்கேயோ நான் சரியாக இல்லை என்பது புரிகிறது. நான் ஒரு பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழகி கடனெல்லாம் வாங்கி மலேசியா சென்றேன். அங்கு 4 நாட்கள் தான் இருந்தேன். அந்த 4 நாளில் நான் ரொம்ப டார்ச்சர் அனுபவித்தேன். அந்த பெண் எப்போது பார்த்தாலும் பிரச்சினை பற்றி பேசியது, குடித்துக் கொண்டே இருந்தார். தங்கும் இடத்தில் கூட ஃபேன் கிடையாது. பணத்தையெல்லாம் இழந்து எப்படியோ எஸ்கேப் ஆகி வந்து விட்டேன். ஒருவருடன் நாம் உடலுறவு கொள்ளும்போது காதல் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.  நான் அப்ப ரொம்ப வெறுமையா இருந்ததால் ஏதாவது ஒன்று கிடைக்காதா என எண்ணி மலேசியா சென்றேன். நான் நினைத்து சென்றது ஒரு விஷயம்.. நடந்தது வேறு விஷயம்” என மணிகண்டன் பேசியிருப்பார்.