இயக்குநராக ஆசைப்பட்ட தான் எப்படி நடிகராக மாறினேன் என்பதை நடிகர் பரணி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கல்லூரி படம் மூலம் நடிகராக அறியப்பட்ட பரணி, அதன்பிறகு நாடோடிகள், நேற்று இன்று, தூங்கா நகரம், பொட்டு, நாடோடிகள் 2, தெற்கத்தி வீரன் சில பல படங்களில் நடித்தார். 2017ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் நேர்காணலில் பேசிய பரணி, “நான் இயக்குநராக வர வேண்டும் என ஆசைப்பட்டேன். 5ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே கதை எழுதி வந்தேன். டி.ராஜேந்தர் அவரது படங்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என எல்லாம் அவரே மேற்கொள்வார். அதனைப் பார்த்து தமிழ் புத்தகத்தில் அப்படி எழுதி பார்த்தேன். நான் படிக்கவில்லை ஆசிரியர் என் அப்பாவிடம் கூறி அந்த புத்தகத்தைக் காட்ட சாப்பிடும்போது குழம்பு கரண்டியால் அடிவாங்கியது இன்னும் நினைவில் இருக்கிறது.
காலப்போக்கில் நல்ல கதை ஒன்றை எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஒருமுறை கல்லூரி படத்தின் ஆடிஷன் போய்க் கொண்டிருந்தது. ஷங்கர் அந்த படத்தை தயாரித்தார். அவரின் அலுவலகத்தில் உறவினர் ஒருவர் ஆடிட்டராக இருந்தார். அவங்க தான் என்னிடம் நீ கதை சொல்லிட்டே இருக்கியே, ஷங்கர் அலுவலகத்தில் போய் பாரு என சொன்னார். நானும் போனேன். அப்போது ஷங்கர் தயாரித்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் அடுத்தப்படமாக கல்லூரி எடுக்க பாலாஜி சக்திவேல் முடிவு செய்திருந்தார். நான் அவரின் அலுவலகத்துக்கு சென்றதும், அங்கிருந்த அவர் எதுக்கு வந்துருக்கீங்க என கேட்டார். நான் இயக்குநராக வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.
உதவி இயக்குநராக சேர வந்துள்ளேன் என கூறினேன். அந்த வேலை இல்லை என சொல்லி என்னை போக சொன்னார்கள். படியை விட்டு கீழே இறங்கும்போது எந்த ஊரு என கேட்க, மதுரை என்று சொன்னேன். மதுரைக்காரங்க எல்லாரும் சும்மா வாய் பேச்சு தான் என அவர் சொல்ல நான் மறுபடியும் மேலேறி போய் சண்டை போட்டேன். உதவி இயக்குநராக வேலை இல்லை என்றால் விடுங்கள், அதனை விடுத்து இப்படியெல்லாம் பேசாதீங்க என எங்களுக்குள் வாக்குவாதம் சென்றது.
தொடர்ந்து நான் நடித்து காட்டுகிறேன் என ஒரு காட்சியை பேசினேன். அதனை எனக்கே தெரியாமல் கேமராவில் வீடியோ எடுத்து பாலாஜி சக்திவேலிடம் காட்டினார்கள். அதன்பிறகு ஒரு 10 பேரை நான் நடித்த கேரக்டருக்காக தேர்வு செய்து காட்சியை சொல்வார்கள். இப்படியாக ஒரு வருடம் சென்று விட்டது. இருந்தாலும் நான் இந்த கேரக்டரில் நடிக்கிறேனா இல்லையா என்பதே தெரியாமல் இருந்தது.
அதன்பிறகு லாரன்ஸ் மாஸ்டரின் உதவியாளர் ஒருவர் எஸ் பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் என்னை ஆபீஸ் பாய் என நினைத்து கேட்க, என்னை கைகாட்டி அந்த பையன் தான் செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறான் என கூறவும் தான் நான் இந்த படத்தில் இருப்பதே எனக்கு தெரிந்தது.
ஒளிப்பதிவாளர் செழியன் என்னிடம் பேசும்போது, பசி தாங்கி உதவி இயக்குநராக மாறப் போகிறாயா அல்லது நன்றாக சாப்பிட்டு நடிக்கப் போகிறாயா என கேட்டார். நான் உடனேயே, என்னால் பசிதாங்க முடியாது. நான் நடிக்கிறேன் என கூறினேன். சிவகங்கையில் முதல் நாள் ஷூட்டிங்கில் சொதப்பி விட்டேன். உன்னை நம்பி தாண்டா படம் முழுக்க பக்கம் பக்கமாக டயலாக் எழுதியிக்கேன் என பாலாஜி சக்திவேல் கூறினார். கல்லூரி படம் முடிந்து தேவி தியேட்டரில் இருந்து வெளியே வந்ததும் தூக்கி கொண்டாடினார்கள்” என கூறியுள்ளார்.