நடிகர் பரத்தின் 50வது படமாக உருவாகியுள்ள ‘லவ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


தமிழ் சினிமாவில் பரத் 


2003 ஆம் ஆண்டு தமிழில் பாய்ஸ் படத்தின்  மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். அவருக்கு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து செல்லமே, பிப்ரவரி 14, பட்டியல், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, எம்டன் மகன், சென்னை காதல், வெயில், கூடல் நகர், பழனி, நேபாளி, முனியாண்டி, சேவல், கண்டேன் காதலை, வானம், திருத்தணி, 555 உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.


இவர் கடைசியாக நடப்பாண்டு சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான Story of Things என்ற படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘லவ்’ என்னும் படத்தில் பரத் நடித்துள்ளார். 


50வது படம் 


ஆர்.பி.பாலா இயக்கியுள்ள இந்த படம் பரத்தின் 50வது படமாக உருவாகியுள்ளது. லவ் படத்தின் ஹீரோயினாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, ராதா ரவி, பிக்பாஸ் டேனியல்  உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரோனி ரஃபேல் இசையமைத்துள்ள  நிலையில்,  பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். 


லவ் படத்தின் டீசர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியானது. என்னதான் ரொமான்டிக் ஆக படத்தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும் திகிலூட்டும் வகையில் காதலை கையாண்டிருந்தார்கள். இப்படியான நிலையில் லவ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 


மிரட்டலாக அமைக்கப்பட்டிருக்கும் கதை 


லவ் படத்தில் காதலர்களாக வரும் பரத் - வாணி போஜன் இடையே வேறுபட்ட எண்ணங்களை கொண்டவர்களாக இருப்பது போலவும், திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வாணி போஜனை கோபத்தில் கொலை செய்யும் பரத், அதனை மறைக்க போராடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மிரட்டலாக அமைந்துள்ள ட்ரெய்லர் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.