நடிகர் அசோக் செல்வனும், நடிகர் அருண் பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் இன்று திருநெல்வேலியில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில், இவர்களது திருமணம் செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'ப்ளூ ஸ்டார்' என்ற திரைப்படத்தில் அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் நடித்து வந்தபோது, இருவருக்கும் இடையேயான பழக்கம் காதலாக மலர்ந்துள்ளது. இதையடுத்து, இருவரும் கடந்த ஒரு வருட காலமாக காதலித்து வந்தநிலையில், இந்த ஜோடி சமீபத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
நடிகர் அசோக் செல்வன் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” என பதிவிட்டுள்ளார்.
இதைதொடர்ந்து, இன்று திருநெல்வேலி சேது அம்மாள் பண்ணையில் நடிகர் அசோக் செல்வன் - நடிகை கீர்த்தி பாண்டியன் ஜோடிக்கு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் திருமண நடைபெற்ற நிலையில், காலை 8 மணி முதல் பெரிய விருந்தே நடைபெற்று வருகிறது.
அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் தங்களது சினிமா நண்பர்களுக்காக வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
அசோக் செல்வன்:
நடிகர் அசோக் செல்வன் கடந்த 2023ம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' மூலம் பிரபலமாகி, தெகிடி, ஓ மை கடவுளே, மன்மத லீலை போன்ற படங்கள் இவருக்கு வரிசை கட்டியது. சமீபத்தில் வெளியான பொர் தொழில் திரைப்படத்தில் நடிகர் சரத் குமாருடன் இணைந்து நடித்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
கீர்த்தி பாண்டியன்:
நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் இளைய மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ம் ஆண்டு வெளியான ’தும்பா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மலையாளப் படமான 'ஹெலன்' படத்தின் ரீமேக்கான 'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி, தற்போது அசோக் செல்வனுடன் 'ப்ளூ ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார். இதில் சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரஞ்சித்தின் முன்னாள் உதவியாளரான அறிமுக இயக்குனர் எஸ் ஜெயக்குமார் எழுதி இயக்கியுள்ள இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. . இவர்களது திருமணத்திற்கு பிறகு இந்த படம் முதல் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் சிஎஸ் கார்த்திகேயனின் ’சபா நாயகன்’ படத்தில் நடிகர்கள் மேகா ஆகாஷ் மற்றும் மயில்சாமி ஆகியோருடன் அசோக் செல்வனும் நடிக்கிறார் .
நடிகை ரம்யா பாண்டியன் வாழ்த்து:
நடிகையும், நடிகர் அருண் பாண்டியனின் உறவினருமான ரம்யா பாண்டியன் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.