தமிழ் திரையுலகின் கேப்டன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் மூலம் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களும், நடிகர்களும் உச்சத்திற்குச் சென்றுள்ளனர். அவர்கள் பலரும் தற்போது வரை விஜயகாந்த் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து அவ்வப்போது நேர்காணலில் தெரிவித்து வருகின்றனர்.
தேவன்:
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்தவர் அருண் பாண்டியன். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவர் 2002ம் ஆண்டு தானே தயாரித்து, இயக்கிய திரைப்படம் தேவன். இந்த படத்தில் விஜயகாந்த், கார்த்திக் ஆகியோருடன் அருண் பாண்டியனும் நடித்திருப்பார்.
போயி வேலையைப் பாருடா:
இந்த படம் உருவானது குறித்து அருண்பாண்டியன் கூறியிருப்பதாவது, நான் தேவன் படம் பண்ணும்போது அவர் குஷால்தாஸ் பில்டிங்கில் ஒரு ஷுட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. தவசியோ ஏதோ ஒரு படம் நடந்துகிட்டு இருந்துச்சு. நான் போய் சார் நான் ஒரு படம் பண்ணப்போறேன்.
ரொம்ப நல்லதுனு சொன்னாரு. நான் நீங்கதான் நடிக்குறீங்கனு சொன்னேன். நான் நடிக்குறேன்னா? சரி பண்ணிடலாம் பாண்டினு சொன்னாரு. சார் கதை சொல்றேன்னு சொன்னேன். ஹே சும்மா இருப்பா. போயி வேலையை பார்றா என்றார். நான் நடிக்குறேன் பாண்டி நீ போனு சொல்லிட்டாரு.
எனக்கு என்ன பண்றது? என்ன பேசுறதுனு தெரியல? ஒன்னுமே புரியல. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. இப்படி ஒரு வார்த்தை சொல்றாரு. நான் போயி வசனகர்த்தா வேலுமணிக்கிட்ட சொன்னேன். இப்படி சொன்னாருனு சொன்னேன். என்ன சார் இப்படி சொல்றீங்க?னு சொன்னாரு. எப்போ ஷுட்டிங்னு சொன்னாரு.
அதுக்கு அப்புறம் நான் சண்டிகர்ல ஷுட்டிங்னு ரெண்டு மாசம் கழிச்சு திருப்பி போய் ஒரு முயற்சி பண்ணேன். கதையை கேக்கவே மாட்டேனு சொல்லிட்டாரு. அப்போ அவரு பீக்ல இருந்தாரு. எந்த இடத்துல இருந்தாருனா அவரு தேதிக்காக எல்லாரும் வெயிட்டிங்ல இருப்பாங்க. அந்த சூழலில் அவர் சொன்ன வார்த்தை எல்லாம் அப்படியே இருந்தாரு.
இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பார்.
ஆக்ஷன் த்ரில்லர் படம்:
ஆக்ஷன் கிரைம் த்ரில்லர் படமான இந்த படத்தில் விஜயகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், கார்த்திக் வழக்கறிஞராகவும் நடித்திருப்பார்கள். இவர்களுடன் மீனா, கெளசல்யா, விவேக், சாய்குமார், சந்திரசேகர், செந்தில், தலைவாசல் விஜய், வினு சக்கரவர்த்தி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். இளையராஜா இசையமைத்திருப்பார்.
அருண் பாண்டியன் விஜயகாந்துடன் இணைந்து ஊமை விழிகள், தாயகம், விருதகிரி, தேவன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். விஜயகாந்த் அருண்பாண்டியன் மீது கொண்ட அன்பால் தனது தேமுதிக-வில் அவருக்கு பேராவூரணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். அவரும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார். பின்னர், 2016ம் ஆண்டு தேமுதிக-வில் இருந்து விலகி அதிமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.