நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன தடம் (Thadam) படம் இன்றோடு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
கொண்டாடப்படாத இயக்குநராக மகிழ்திருமேனி
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மிகப்பெரிய திறமை இருந்தும் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருப்பார்கள். அவர்கள் இயக்கிய படம் சில காலம் கழித்து ரசிகர்களால் கொண்டாடப்படும். அப்படியான ஒரு இயக்குனர் தான் மகிழ்த்திருமேனி. இவர் தற்போது நடிகர் அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை மகிழ்திருமேனி இயகியுள்ளார்.
தடம் ஓர் பார்வை
இப்படியாக மகிழ்திருமேனி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு நடிகர் அருண் விஜய் நடித்த படம் தான் தடம். இந்தப் படத்தில் தான்யா ஹோப், யோகி பாபு ,ஸ்ருதி வெங்கட் ,வித்யா பிரதீப், பெப்சி விஜயன் உள்ளிட்ட குறிப்பிட்ட சில கேரக்டர்களை பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அருண் ராஜ் இசை அமைத்த தடம் படம் தமிழில் சிறந்த க்ரைம் திரில்லர் படங்களில் ஒன்றாக அமைந்தது.
படத்தின் கதை
ஒரு கொலை நடைபெறுகிறது. இந்த வழக்கில் சிசிடிவி காட்சி அடிப்படையில் சிவில் இன்ஜினியரான அருண் விஜய் கைது செய்யப்படுகிறார். காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கு குடிபோதை வழக்கில் மற்றொரு அருண் விஜய் வருகிறார். உருவம் தொடங்கி கைரேகை வரை அனைத்தும் ஒற்றுமையாக இருப்பதால் யார் உண்மையான கொலைவாளி என்பதை கண்டுபிடிப்பதில் போலீசுக்கு சிக்கல் நிலவுகிறது. விசாரணையில் இருவரும் இரட்டையர்கள் என தெரிய வர இறுதியில் உண்மையான கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டாரா என்பதே தடம் படத்தின் கதை ஆகும்.
மாஸ் காட்டிய திரைக்கதை
வழக்கமான இரட்டையர் கதை என்றாலும் மாறுபட்ட திரைக்கதையைத் தந்து படம் பார்க்க வந்த ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருந்தார் இயக்குனர் மகிழ்திருமேனி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிறு வயது அருண் விஜய் மகா அம்மாவாக சோனியா அகர்வால் சிறப்பான கதாபாத்திரம் ஏற்ற நடித்திருந்தார். திரில்லர் படங்களுக்கு உரிய டுவிஸ்ட் கள் வைத்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்றும் ஐடியா தராமல் யாருதான் அந்த உண்மையான குற்றவாளி என கடைசி காட்சி வரை இழுத்துச் சென்றதில் மகிழ்ந்திருமேனி வெற்றி கண்டிருந்தார். சீரியலிலும் சில படங்களிலும் தலை காட்டி வந்த வித்யா பிரதீப் இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்பு திறமையை நிரூபித்து இருந்தார். சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் இந்த படம் அருண் விஜயின் கேரியரில் மிகச்சிறந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.