என்னை பொறுத்தவரை செய்யும் பணியில் முழு அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் என நடிகரும், இயக்குநருமான சிங்கம் புலி தெரிவித்துள்ளார். 


உதவி இயக்குநர், திரைக்கதையாசியர், இயக்குநர், காமெடி நடிகர் என பன்முக திறமை கொண்ட சிங்கம் புலி, சமீபத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான மகாராஜாவில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். யாருமே எதிர்பாராத வகையில் அமைந்த இந்த கேரக்டர் சிங்கம் புலிக்கு பாராட்டுகளையும், திட்டுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது. 


இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நான் இயக்குநர்கள் சுந்தர் சி மற்றும் பாலா ஆகியோரிடம் வேலை பார்த்து கொண்டிருக்கும்போதும் சரி, அஜித் மற்றும் சூர்யா படம் பண்ணும்போதும் சரி என்னை நேசிக்கும் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் “உன்னை ஒருநாள் நடிக்க வைக்கிறோம்” என தெரிவிப்பார்கள். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். பணத்தை எல்லாம் எதிர்பார்க்கமாட்டேன். என்னிடம் கேட்டால் செய்து கொடுத்து விடுவேன். நான் இயக்குநராக உதவி இயக்குநராக இருந்தவர்கள் எல்லாரும் இன்று இயக்குநர்களாக உள்ளனர். நான் இயக்கிய  நடிகர்களுடன் இன்றைய தலைமுறையினர் போட்டோ கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


நான் 6 படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறேன். 2 படங்கள் இயக்கியிருக்கிறேன். எனக்கு திருப்புமுனை கொடுத்த படம் மாயாண்டி குடும்பத்தார். அந்த படத்தில் 2 நாட்கள் தான் நடிக்கப்போனேன். ராசு மதுரவன் என்னை ஏமாற்றி அழைத்துப்போனார். என் நண்பர் தான். ஆனால் நான் 41 நாட்கள் நடித்தேன். 2, 3 வருடம் எல்லாம் படம் பண்ணோம். ஆனால் ஒருத்தர் கூட ஒரு நேர்காணலுக்கு கூட என்னை அழைக்கவில்லை. 


சின்ன குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றுவது மாதிரி ராசு மதுரவன் நடிக்க வைத்தார். மாயாண்டி குடும்பத்தார் அவ்வளவு பெரிய ஹிட். எனக்கு வீடு, வாசல், கார் எல்லாம் கொடுத்துட்டு ராசு மதுரவன் இறந்து போனார். அதனால் எது நல்லது, கெட்டது எல்லாம் நம்ம கையில் இல்லை. முழு அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்” என சிங்கம் புலி கூறியுள்ளார். 


மாயாண்டி குடும்பத்தார் படம்


கடந்த 2009 ஆம் ஆண்டு மறைந்த இயக்குநர் ராசு மதுரவன் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் படம் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்த படமாகும். இப்படத்தில் மணிவண்ணன், ஜி.எம்.குமார், நந்தா பெரியசாமி, ரவி மரியா, ராஜ் கபூர், தருண் கோபி, சீமான், பொன்வண்ணன், சிங்கம் புலி, ஜெகன் குமார் என 10 இயக்குநர்கள் நடித்திருந்தனர். மேலும் பூங்கொடி, தீபா ஷங்கர், இளவரசு, மயில்சாமி என பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.