விமான சாகச நிகழ்வில் 5 பேர் பலியான போது யாரை கைது செய்தோம்? அல்லு அர்ஜூனனை கைது செய்தது எந்த விதத்தில் நியாயம் என பாஜகவை சேர்ந்த சரத்குமார் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒரு விழாவிற்கு ஒரு பிரபலம் செல்கிறார் என்றால் கூட்டம் வரும். அப்படி கூட்டம் வருகிறது என்றால் அது முன்கூட்டியே போலீசாருக்கு தெரிந்திருக்கும். இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால் தியேட்டர் உரிமையாளராவது போலீசாருக்கு சொல்லியிருப்பார். கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது அல்லு அர்ஜூனனை அணுகி நீங்கள் வரவேண்டாம். எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். வந்த பிறகு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதற்கு அவர்தான் காரணம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கின்றேன். விமான வீர தீர சாகசங்கள் நிகழ்வின்போது 5 பேர் உயிரிழந்தார்கள். அப்போது யாரை கைது செய்தோம்? ஏர் மாஸ்டரை கைது பண்ணுவீங்களா? அப்படி இல்லை எனும்போது இதில் பாதுகாப்பு சரியாக வழங்கியிருக்க வேண்டும். இல்லையென்றால் சரியான நேரத்தில் சொல்லாமல் கூட இருக்கலாம். யாரையும் குற்றம் சாட்டவில்லை. அது தேவையா என்பது கூட தெரியவில்லை. 


அதேபோல், நடிகர் மோகன் பாபு விஷயத்தில் பத்திரிகையாளரை அடித்தார் என சொல்லுகிறார்கள். எனக்கு மோகன் பாபுவை நன்றாக தெரியும். அந்த பிரச்சினை அவருக்கும் அவரது மகனுக்குமானது. அந்த பிரச்சினையில் மோகன்பாபு மகன் அந்த வீட்டிற்குள் போவதற்கு உரிமை இருக்கு. அவர் கோபத்தில் என்ன கேட்டாரோ என்பது நமக்கு தெரியாது. 


அந்த கதவை மகன் திறந்து கொண்டு செல்கிறார். பத்திரிகையாளர்களும் கூடவே சென்று விட்டீர்கள். ஆனால் மோகன் பாபுவுக்கு எல்லோரும் பத்திரிகையாளர்கள் என்று எப்படி தெரியும். தன்னை தாக்க வந்த எதிரிகள் என்று கூட நினைத்திருக்கலாம். பாதுகாப்பிற்காக கூட கோபப்பட்டிருக்கலாம். ஒருவர் வீட்டிற்குள் அனுமதி இன்றி செல்ல கூடாது. ஆனால் அவர் வீட்டிற்குள்தானே சென்றிருக்கிறீர்கள். வெளியே வச்சி பண்ணிருந்தால் குற்றமாக இருந்திருக்கலாம். எனவே இதை கமிஷனர் பார்த்து நிதானமாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.