ஐ.பி.எல் இறுதிப் போட்டி


2024 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் இறுதிப் போட்டி நேற்று மே 26 ஆம் தேதி நடைபெற்றது. கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஹைதராபாத் அணி அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து 113 ரன்கள் எடுத்தது. எந்த வித சிரமும் இல்லாமல் கொல்கத்தா அணி இந்த இலக்கை எட்டி கோப்பையைக் கைப்பற்றியது. கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இதே சென்னை மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐ.பி,.எல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத் தக்கது. கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக் கான் தனது குடும்பத்துடன் இந்த வெற்றியை மைதானத்தில் கொண்டாடினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த சி.எஸ்.கே ரசிகர்களுக்கும் அவர் தனது மரியாதையை தெரியப் படுத்தியது ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. 


கண் கலங்கிய காவ்யா மாறன்


அதே நேரம் ஹைதராபாத் அணியின் தோல்வியால் மனமுடைந்து போனார் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன். இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் அதிக விலைக் கொடுத்து ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தார் காவ்யா மாறன். அவரது இந்த முடிவை பலரும் கேலி செய்தார்கள். ஆனால் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் வகையில் ஐ. பி.எல் வரலாற்றில் இதுவரை காணாத அளவு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஹைதராபாத் அணி. ஒவ்வொரு போட்டியிலும்  மகிழ்ச்சி , சோகம் , கோபம் என தன் உணர்ச்சிகளை வெளிப்படையாக காட்டிவரும் காவ்யா இறுதிப் போட்டியில் பாதியில் எழுந்து கிளம்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து போட்டி முடிந்தபோது கலங்கிய கண்களுடன் வந்து அவர் தனது அணிக்கும் வெற்றி பெற்ற அணிக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


ஆறுதல் சொல்ல அமிதாப் பச்சன்


இப்படியான நிலையில் காவ்யா மாறனுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது பதிவில் ஆறுதல் சொல்லியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது பதிவில் அமிதாப் பச்சன் “இந்த ஆண்டு ஐ.பி,எல் தொடரில் சிறப்பாக ஆடிய அணி ஹைதராபாத். அவர்களின் தோல்வி ஏமாற்றமளிக்கிறது. அதே நேரம் சிறப்பாக ஆடிய கொல்கத்தா அணிக்கு வாழ்த்துக்கள். எல்லாவற்றுக்கும் மேல் காவ்யா மாறன் தனது அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு எதிரணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தனது உணர்ச்சிகளை கேமராவில் மறைக்க அவர் ரொம்ப கஷ்டப் பட்டார். அவருக்காக நான் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை மற்றுமொரு நாளே மை டியர்” என்று அவர் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.