தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது நடிப்பில் துணிவு படத்திற்கு பிறகு எந்த படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீசாக உள்ளது.
விடாமுயற்சி:
நடப்பாண்டிலே விடாமுயற்சி படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படம் தள்ளிப்போனது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து அப்டேட்களை தந்த விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
அஜித்தின் கெட்டப், உடல் மெலிந்த தோற்றம், சவடிக்கா பாடல் என விடாமுயற்சி வைப்பிற்குள் ரசிகர்களை மகிழ் திருமேனி கொண்டு வந்துவிட்டார். விடாமுயற்சியின் மிகவும் வித்தியாசமான டீசரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
வசூலை அள்ள வியூகம்:
விடாமுயற்சி படம் பொங்கல் விருந்தாக அடுத்தாண்டு ஜனவரி 9ம் தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் சமீபகாலமாக வியாழக்கிழமை நாட்களிலே ரிலீசாகிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு வசூலை குறிவைத்து அவ்வாறு ரிலீஸ் செய்கின்றனர்.
விடாமுயற்சி படத்தை 9ம் தேதி ரிலீஸ் செய்தால் 19ம் தேதி வரை என 10 நாட்கள் தியேட்டரில் கண்டிப்பாக ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், பொங்கலுக்காக 9ம் தேதி முதலே பலரும் விடுமுறையில் செல்லத் தொடங்கிவிடுவார்கள். 9ம் தேதி வியாழக்கிழமை, 10ம் தேதி வெள்ளிக்கிழமை வழக்கமாக வரும் கூட்டத்துடன் 11ம் தேதி, 12ம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்கள் கூட்டம் குடும்பமாக திரையரங்கிற்கு வருவார்கள்.
கிங் ஆஃப் ஓப்பனிங்
14ம் தேதி பொங்கல் பண்டிகை என்பதால் 13ம் தேதியான திங்கள் கிழமையும் பெரும்பாலான நிறுவனங்கள், வேலைக்குச் செல்பவர்கள் விடுமுறையில் சென்றுவிடுவார்கள். 14, 15 மற்றும் 16ம் தேதி பொங்கல் விடுமுறை ஆகும். 17ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் அதற்கு அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து 18 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும் பெரும்பாலானோர் விடுமுறையிலே இருப்பார்கள். அதிகாரப்பூர்வமாக 3 நாட்கள் தொடர் விடுமுறை என்றாலும், அரசு சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விடுப்பு அளிக்க வாய்ப்பு உள்ளது. எப்படியும் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொடர் விடுமுறையிலே பலரும் இருப்பார்கள் என்பதால் விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாகவே, அஜித்குமார் கிங் ஆஃப் ஓப்பனிங் என்று கோலிவுட்டில் அழைக்கப்பட்டு வருகிறார். 2 வருடங்களுக்கு பிறகு அவர் படம் வருவதால் கண்டிப்பாக படம் 19ம் தேதி வரை தியேட்டர்கள் கூட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால், கண்டிப்பாக நல்ல வசூல் படம் குவிக்கும் என்று படக்குழு நம்புகிறது.
லைகா நிறுவனத்திற்கு 2024ம் ஆண்டு வெளியான இந்தியன் 2, லால்சலாம் படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தித் தந்தது. இந்த நிலையில், 2024 நஷ்டத்தை 2025 பொங்கலில் அஜித்தை வைத்து அள்ள லைகா தேதி குறித்து வைக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்துடன் அர்ஜுன்,த்ரிஷா, ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளிநாட்டில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது.