நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான ‘விவேகம்’ படம் வெளியாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.
அஜித் ரசிகர்களால் மறக்க முடியாத படம்
2014 ஆம் ஆண்டு நடிகர் அஜித் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வீரம்’ படத்தில் முதல்முறையாக இணைந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படத்தில் நடித்தார். இப்படம் ஓரளவு சுமாரான வெற்றியைப் பெற்றது. இப்படியான நிலையில் சிவாவுடன் 3வது முறையாக அஜித் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. வி எழுத்து வரிசையில் இப்படத்திற்கு ‘விவேகம்’ என பெயரிடப்பட்டது.
கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்
விவேகம் படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்தார். மேலும் அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்க அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்தார். விவேகம் படம் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தியேட்டரில் வெளியானது.
பழைய கதையில் புது கேம் ஆடிய சிவா
நண்பன் துரோகியாகினால் என்ன நடக்கும் என்பதே விவேகம் படத்தின் ஒன்லைன் ஸ்டோரியாகும். அதில் சீக்ரெட் சொஸைட்டி, செயற்கையான நிலநடுக்கம், ஹேக்கிங், பைக் சேஸிங் என ஏகப்பட்ட விஷயங்களை கலந்து கலட்டி கொடுத்திருந்தார் சிவா.
சில்லறையை சிதற விட்ட ரசிகர்கள்
விவேகம் படத்தில் இடம் பெற்ற சர்வைவா பாடலை கண்டு சில்லறையை சிதற விட்டார்கள் ரசிகர்கள். ஆனால் போக போக கதை பழைய படங்களை நோக்கி செல்ல ரசிகர்கள் நொந்து விட்டனர். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அஜித் சண்டை போட்டு கொண்டிருக்க காஜல் அகர்வால் பாட்டு பாடி கொண்டிருப்பார். இதேபோல் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிர் போய் கொண்டிருக்கும் வேளையில் கூட மனைவியுடன் போன் பேசி உயிர் பிழைத்து வரேன்மா என சீரியஸாக சொல்ல தியேட்டரில் சிரிப்பலை எழுந்தது தான் மிச்சம்.
ட்ரோல் மெட்டீரியலான விவேகம்
சமூக வலைத்தளங்கள் வளர்ச்சி அதிகரித்துவிட்ட காலக்கட்டத்தில் விவேகம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. மீம்ஸ் போட்டோ, வீடியோ என தொடர்ச்சியாக வெளிவந்ததை பார்த்து அஜித் ரசிகர்களே மிரண்டு போயினர். பெயரில் இருந்த விவேகத்தை கொஞ்சம் கதையில் காட்டியிருந்தால் படம் ஹாலிவுட் தரத்தில் மிரட்டியிருக்கும் என்பதே உண்மை..!