நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தத வாலி. நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் இன்று கொண்டாடப்படும் எஸ்.ஜே.சூர்யா முதன்முதலில் இயக்குனராக அறிமுகமாகிய திரைப்படம் வாலி.


வாலியில் நடந்த சுவாரஸ்யம்:


தன் மீது ஆசைப்படும் தனது கணவனின் அண்ணனை எப்படி நாயகி எதிர்கொள்கிறாள்? என்பதுதான் படத்தின் கதை. இதில் ஒரே மாதிரி உருவம் கொண்ட இரட்டையர்களாக நடிகர் அஜித் அசத்தியிருப்பார். முதல் பாதியை கலகலப்பாகவும், இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகவும் அளித்து இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா ரசிகர்களின் மனதை வென்றிருப்பார்.


அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக மறைந்த நடிகர் மாரிமுத்து பணியாற்றினார். அவர் அந்த படத்தில் இடம்பெற வேண்டிய காட்சி ஒன்று எடுக்கப்படாமல் போனது குறித்து, பிரபல நடிகரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


இப்படி ஒரு காட்சியா?


அந்த வீடியோவில் இயக்குனர் மாரிமுத்து பேசியிருப்பதாவது, "வாலி படத்தில் கதாநாயகி ஒரு வித அச்ச உணர்வில் கட்டிலில் படுத்திருப்பாள். தன் கணவனுக்கும், தனது கணவன் அண்ணனுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் அவள் குழம்பி தவித்துக் கொண்டிருப்பாள்.


அப்போது, ஒரு உருவம் அவளது படுக்கை அறையில் முகத்தை மூடிக் கொண்டு உள்ளே வரும். சட்டென்று நாயகியின் படுக்கைக்கு அந்த முகத்தை மூடிய நபர் செல்வார். அச்சத்துடன் அவரை கண்டு கதாநாயகி அமர்ந்திருப்பாள். அப்போது, முகமூடியை அகற்றினால் அது அஜித். ஆனால், மீசை இல்லாமல் இருப்பார்.


மீசை எடுக்க மறுத்த அஜித்:


அப்போது, நாயகன் அஜித் சிம்ரனிடம் உனக்காகதான் மீசையை எடுத்தேன் என்று கூறுவார். இனி உனக்கு எந்த கவலையும் வேண்டாம். மீசை இல்லாமல் இருப்பது நான், மீசையுடன் இருப்பது அண்ணன் என கூறுவார். அப்போது, நாயகி மகிழ்ச்சியுடன் நாயகியை கட்டியணைத்துக் கொள்வார். உடனே, இதை அண்ணனிடம் கூறச் செல்வார்கள்.


அப்போது, அங்கே காரை பழுதுபார்த்துக் கொண்டிருக்கும் அண்ணன் அஜித்தை அழைப்பார்கள். திரும்பினால் அவரும் மீசை இல்லாமல் இருப்பார். அதைக்கண்ட தம்பி அஜித் சிரிப்பார். நீயும் என்னைப் போலவே யோசித்தாயா? என்று தம்பி அஜித் சொல்லிக்கொண்டே சிரிப்பார். ஆனால், இந்த காட்சியை படமாக எடுக்க முடியவில்லை. அஜித் சார் மீசையை எடுக்க ஒத்துக்கொள்ளாத காரணத்தால், இந்த காட்சியை எடுக்க முடியவில்லை என்று மாரிமுத்து பகிர்ந்திருப்பார்.


இந்த காட்சி படத்தில் இடம்பெற்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனாலும், வாலி படத்தில் அண்ணன் அஜித் தனது தம்பி மனைவியை அடைவதற்காக மேற்கொள்ளும் வில்லத்தனம் அவரது நடிப்புக்கு சிறந்த தீனியாக அமைந்தது. மேலும், அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்தாலே படம் மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கான தொடக்கப் புள்ளியாக வாலி அமைந்தது.


மேலும் படிக்க: RM Veerappan: பாட்ஷா வெற்றி விழாவில் நடந்தது என்ன? ஆர்.எம்.வீரப்பன் மீது ஜெ.க்கு ஏன் கோபம்?


மேலும் படிக்க: Vishnu Vishal - Soori : ”அண்ணா..” மீண்டும் இணைந்த விஷ்ணு விஷால் - சூரி.. என்ன ஆச்சு? சண்டை முடிஞ்சுதா?