குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அஜித் சினிமாவிற்கு 6 மாதம் கார் பந்தயத்திற்கு 6 மாதம் என நேரங்களை ஒதுக்கியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே  கார் பந்தயங்களில் கலந்துகொண்டு உலக அளவில் 2ஆம் இடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

அஜித் 64வது படம்?

அஜித் நடிக்க இருக்கும் 64ஆவது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் இப்படத்தில் கேஎஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்க அஜித் திட்டமிட்டுள்ளாராம். விரைவில், இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 64ஆவது படத்தை முடித்த பின்னர் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது. 

அஜித்தின் விடாமுயற்சி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித் தனது சினிமாவின் ஆரம்பகாலகட்டத்தில் சந்தித்த அவமானங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், நான் தமிழில் நடிக்க வந்தபோது தமிழ் சரியாக உச்சரிக்க வராது. என்னுடைய பேச்சில் ஆங்கில வாடை அடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. காலப்போக்கில் என்னுடைய பலவீனங்களை தெரிந்து அதை கொஞ்சம் கொஞ்சம் மாற்றிக்கொள்ள முயற்சித்தேன். தற்போது நான் சினிமாவில் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும். 

கார் பந்தயத்தின் மீது காதல்

சினிமாவை போன்றே கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் இருக்கிறது. எனக்கு இப்போது 54 வயது ஆகிறது. என் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருப்பதால் தான் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள முடிகிறது. அதற்கு உறுதுணையாக எனது குடும்பம் பக்கபலமாக இருக்கிறது. கடவுளின் கருணையால் நலமுடன் இருக்கிறேன். உடலில் எந்த காயங்கள் இல்லாமல் கார் பந்தயங்களில் கலந்துகொள்கிறேன். கார் பந்தயத்தில் சிலர் 60 வயதை தாண்டியும் ரேஸிற்கு செல்வதை பார்த்திருக்கிறேன். அதுவரை நானும் கார் பந்தயத்தில் ஈடுபடுவேன். 

இதுதான் எனது விருப்பம்

கார் பந்தயத்தில் அஜித்குமார் கார் ரேஸிங் நிறுவனத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே எனது கனவாக இருக்கிறது. இதற்காக உழைத்து கொண்டிருக்கிறேன். தற்போது வரை என்னை விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்படுவது கிடையாது. அவர்களோடு ஒப்பிடும் அளவிற்கு இல்லாமல் ஒரு வெற்றியாளராக இருக்க விரும்புகிறேன். எனது வாழ்நாளில் இதற்காக நான் முயற்சி செய்தேன். அதற்காக போராடியிருக்கிறேன் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கும் என அஜித் தெரிவித்துள்ளார்.