தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் விடாமுயற்சி படம் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வந்த நிலையில், விடாமுயற்சி படம் அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. விடாமுயற்சி படம் நடித்துக் கொண்டிருந்தபோதே அஜித்குமார் குட் பேட் அக்லி படத்தில் ஒப்பந்தம் ஆனார்.
குட் பேட் அக்லி ஷூட்டிங் ஓவர்:
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் என ஒவ்வொன்றும் ரிலீசாகும்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விடாமுயற்சி படத்தை காட்டிலும் குட் பேட் அக்லி படத்திற்கே அதிகளவு எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்திற்காக அஜித்தின் கெட்டப், போட்டோஸ் இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிவிட்டுள்ளார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் அஜித்தும், சுனிலும் பேசும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அமர்க்களம் தோற்றத்தில் அஜித்:
அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் எடை கூடி குண்டான தோற்றத்திலே காட்சி தந்து வந்தார். ஆனால், சமீபகாலாக மிகவும் உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் காட்சி தந்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் நேற்று பகிர்ந்துள்ள படத்தில் அமர்க்களம் படத்தில் பார்த்த அஜித்போலவே அவர் இருப்பது, அவரது ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1999ம் ஆண்டு வெளியான அமர்க்களம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அந்த படத்தில் அஜித்தின் கெட்டப் மிகவும் பிரபலம். சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு அதே தோற்றத்தில் அஜித் இருப்பது ரசிகர்களை மிகுந்த உற்சாகம் ஆக்கியுள்ளது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
எப்போது ரிலீஸ்?
குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. முதலில் பொங்கல் வெளியீடாக குட் பேட் அக்லி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித்துடன் பிரசன்னா, பிரபு, அர்ஜூன் தாஸ், ராகுல் தேவ், யோகிபாபு, தெலுங்கு திரை பிரபலம் சுனில் நடிக்கின்றனர். கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படம் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.