தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித். உச்சநட்சத்திரமாக உலா வரும் அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே வருடத்திற்கு ஒரு படம், இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று நடித்து வருகிறார்.


இவரது நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு துணிவு படத்திற்கு பிறகு இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட விடாமுயற்சி படத்திலும், குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடித்து வருகிறார்.

சபரிமலையில் அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்:


விடாமுயற்சி படத்தின் படத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், விடாமுயற்சி படத்தின் பெயர், படப்பிடிப்பு தளத்தில் கிளிம்ப்ஸ் தவிர வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்த நிலையில், படம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்த சென்ற அஜித் ரசிகர்கள் சபரிமலை கோயில் வாசலில் அஜித் புகைப்படம் பொறித்த பேனருடன் நின்று போஸ் கொடுக்கின்றனர். அந்த பேனரில் அவர்கள் விடாமுயற்சி டீசரை வெளியிடுமாறு லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த பேனரின் கீழே அஜித்தே கடவுளே என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.







குவியும் கண்டனங்கள்:


அந்த பேனரில் TN 73 பாய்ஸ் என்று இடம்பெற்றுள்ளது. அந்த பதிவெண் ராணிப்பேட்டை பதிவெண் ஆகும். சமூக வலைதளங்களில் அஜித் படங்களின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள் பின்னர் பொது வெளியில், முக்கிய நிகழ்ச்சிகளில் அஜித் பட அப்டேட் கேட்டு வந்தனர். தற்போது, புகழ்பெற்ற கோயிலான சபரிமலை ஐயப்பன் கோயிலில் விடாமுயற்சி படத்தின் அப்பேட் கேட்ட அஜித் ரசிகர்கள் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


கொரோனா காலகட்டத்தில் வலிமை படம் தாமதமானபோது இந்த அப்டேட் கேட்கும் வழக்கம் தொடங்கியது. கிரிக்கெட் வீரர் மொயின் அலி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலிமை அப்டேட் கேட்டனர். சமீபகாலமாகவே பல இடங்களில் கடவுளே அஜித்தே என்ற கோஷம் எழுப்பப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கடவுளே அஜித்தே என்ற கோஷத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவர்கள் எழுப்பினர்.


இந்த நிலையில், ஐயப்பன் கோயிலில் விடாமுயற்சி டீசர் கேட்டு கடவுளே அஜித்தே என்ற வாசகத்துடன் நின்றது பெரும் கண்டனத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.