'உலகத்தை நேசி.. ஒருவரையும் நம்பாதே. தூங்கும்போதும் ஒரு கண்ணை மூடாதே' அஜித்தின் ரெட் படத்தின் ஒரு பாடலில் இப்படி ஒரு வரி வரும். எல்லாரையும் நேசி ஆனால் யாரையும் நம்பாதே, கண்ணசரும் நேரத்தில் கூட உன்னை ஏமாற்றிவிடுவார்கள். ஜாக்கிரதையாக இரு என எச்சரிக்கும் வகையிலான வரிகள் இவை. அஜித்தின் வாயசைப்பில் அந்த வரிகள் வெளிப்படும்போது அந்த வரிகள் கூடுதல் உண்மையை தாங்கிக் கொள்கின்றன. எக்கச்சக்கமான ஏமாற்றங்கள்...இழப்புகள்...புறக்கணிப்புகள் அத்தனையும் கடந்து வென்றவர், தான் கடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப்பார்த்து தன் சகாக்களுக்கு அறிவுரை கூற நினைத்தால் இப்படித்தான் கூறுவார் அவர்..


ஆனால், இதில் ஒரு முரண் ஒளிந்திருப்பதாக தெரிகிறது. அஜித்தின் 30 ஆண்டுகால கரியரை கொஞ்சம் திருப்பிப் பார்த்தோமேயானால் அவர் ஒவ்வொரு சமயங்களிலும் சில குறிப்பிட்ட நபர்களின் மீது அதிக நம்பிக்கையை வைத்திருக்கிறார். தன்னை முழுமையாக அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். வெற்றி தோல்விகளை கடந்து சக மனிதர்களை சக கலைஞர்களை அதிகம் நேசித்திருக்கிறார். 




90 களின் நடுப்பகுதியில் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. அந்த சமயத்தில் அஜித் தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்து நொடிந்து போய் நிற்கிறார். அப்போது அஜித்தின் நண்பர் ஒருவர் அவருக்கு ஒரு ஆஃபரை கொடுக்கிறார். 'நீங்கள் சின்னதிரைக்கு வந்துவிடுங்களேன். அங்கே உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது' என கூறியிருக்கிறார். அதற்கு அஜித் 'I will make it one day. Don't Worry' என பதில் கூறியிருக்கிறார். நமக்கான நாள் என்றைக்காவது வந்தே தீரும் என்கிற அஜித்தின் அந்த தன்னம்பிக்கைதான் அவரை இந்த உயரத்தில் இன்று அமர்த்தியிருக்கிறது. விஷயம் என்னவெனில், அஜித் தன் மீது வைத்த நம்பிக்கைக்கு இணையாக சக கலைஞர்கள் சிலரின் மீதுமே அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கைக்காக மிகப்பெரிய ரிஸ்க்குகளையும் அஜித் எடுத்திருக்கிறார்.


ரமேஷ் கண்ணா, இன்றைக்கும் அஜித்தின் குட்புக்கில் இருப்பவர். இவர் 90 களில் உதவி இயக்குனராக இருந்து தனியாக படம் இயக்க முயன்று கொண்டிருந்த சமயத்தில் தொடர்ச்சியாக ஒன்றிரண்டு படங்களில் கமிட் ஆகி அத்தனையும் ட்ராப் ஆனது. இந்த விரக்தியில் இருந்தவருக்கு முதல் படத்தை கொடுத்தது அஜித் தான். 'தொடரும்' என்ற அந்த படத்தில்தான் முதல்முதலாக இயக்கம் - ரமேஷ் கண்ணா எனும் பெருமை அவருக்கு கிடைத்தது. படம் பெரிதாக வெற்றிப்பெறவில்லை என்றாலும் ரமேஷ் கண்ணாவின் மீது அஜித் வைத்த அந்த நம்பிக்கைதான் இருவரும் இன்று வரை நல்ல நண்பர்களாக தொடர்வதற்கு காரணமாக அமைந்தது.


'வாலி' அஜித்தின் கரியரில் மிக முக்கியமான படம். நவீன சிந்தனைகள் மற்றும் படங்களை பற்றிய புரிதல் பெருகிவிட்ட இந்த காலத்திலுமே, வளர்ந்து வரும் ஹீரோ ஒருவர் அப்படி ஒரு படத்தில் நடிக்க சம்மதிப்பாரா என்பது சந்தேகம்தான். அதுவும் அறிமுக இயக்குனர் எனும்போது நிச்சயம் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். இமேஜே கெட்டுவிடும் என அஞ்சுவார்கள். ஆனால், அஜித் எஸ்.ஜே.சூர்யாவின் மீது நம்பிக்கை. அவரின் திரைக்கதை மீது இன்னும் அதிக நம்பிக்கை வைத்தார். பல தடங்கல்களுக்கு மத்தியில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போதும் பொறுமையாக அந்த படத்தை முடித்துக் கொடுத்தார். படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவே மிகப்பெரிய நட்சத்திரமாகி இன்று வரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.




எஸ்.ஜே.சூர்யாவின் மீது வைத்த அதே நம்பிக்கையைத்தான் பின்நாளில் வெங்கட் பிரபுவின் மீதும் வைத்தார். அதுவரை இளம் நடிகர்களை வைத்து விடலைத்தனமாக ஜாலியான கதைகளை மட்டும இயக்கிக் கொண்டிருந்த வெங்கட் பிரபுவிடம் தனது 50 வது படத்தை தூக்கி கொடுக்கிறார். இதுவும் வாலி போன்று எசகுபிசகான கதைதான். 'நானும் எவ்வளவு நாளுதான் நல்லவனாவே நடிக்கிறது' என அலுத்துப்போகும் அளவுக்கு வில்லாதி வில்லன். வெங்கட் பிரபுவை அஜித் நம்பிவிட்டார். தன்னை ஒப்படைத்துவிட்டார். அவ்வளவுதான். படம் ப்ளாக்பஸ்டர்தான்.


கடந்த சில ஆண்டுகளில் அஜித்தை அதிகம் இயக்கியிருப்பது சிறுத்தை சிவாதான். அவர் இயக்கத்தில் விவேகம் அதிர்ச்சியளிக்கும் வகையில் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைகிறது. அத்தோடு அஜித் - சிறுத்தை சிவா கூட்டணி முறிந்திருக்க வேண்டும். ஆனால், அஜித் கைவிடவில்லை. 'Don't Worry. I will make it one day' எனக்கூறிய போது அவருக்கு அவர் மீதே எவ்வளவு நம்பிக்கை இருந்ததோ, அதே அளவுக்கான நம்பிக்கையை சிவா மீது வைத்தார். விஸ்வாசம் உருவாகிறது. படம் அதிரிபுதிரி ஹிட். அதுவரையிலான கலெக்சன் ரெக்கார்டுகள் அத்தனையும் தவிடுபொடியாக்கப்பட்டன.


விஸ்வாசம் மெகா ஹிட். அதைத்தொடர்ந்து அடுத்து நடிக்கும் படமும் இதேபோன்று கமர்சியலாக பெரிய ஹிட் ஆக வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்கும். ஆனால், அஜித் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கிறார். பிங்க் படம் பேசிய கருத்தின் மீது நம்பிக்கை வைத்து அதை ரீமேக் செய்யும் முடிவிற்கு வருகிறார். அந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதிக்காக அவரின் கணவரான போனி கபூருக்கே கொடுத்தார். 




நேர்கொண்ட பார்வை விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெறுகிறது. அதே ஹெச். வினோத்துடன் அடுத்து வலிமை செய்கிறார். அது ஒரு தோல்விப்படமாக அமைகிறது. ரசிகர்கள் ஹெச்.வினோத்தை கேலி செய்கிறார்கள். சிலர் ஹெச்.வினோத்தின் மீது கொலைவெறியாகிறார்கள். இப்போதும் அஜித் மாறவில்லை. சிறுத்தை சிவா மீது வைத்த நம்பிக்கையை வினோத் மீதும் வைத்தார். இப்போது இருவரும் இணைந்து அடுத்தப்படத்திற்கான வேலையில் பரபரப்பாக இறங்கியிருக்கிறார்கள். ரசிகர்களுக்கு வினோத்தின் மீது வினோத்தின் கதை மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அஜித் வினோத் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. எப்படி அவர் முழுவதுமாக நம்பிய போது எஸ்.ஜே.சூர்யா ஒரு க்ளாஸான வாலியை கொடுத்தாரோ, எப்படி வெங்கட்பிரபு ஒரு மாஸான மங்காத்தாவை கொடுத்தாரோ, எப்படி சிவா ஒரு மெகா கமர்சியலான விஸ்வாசத்தை கொடுத்தாரோ அதேபோலவே வினோத்தும் ஒரு மிகப்பெரிய ப்ளாக்பஸ்டரை அஜித்தின் நம்பிக்கைக்கு காணிக்கையாக்குவார்.


அஜித்தின் நண்பரான விஜய்யிடம் அஜித்தை பற்றி எப்போது கேட்டாலும், அவரின் 'தன்னம்பிக்கை' தான் எனக்கு பிடித்த விஷயம் என கூறுவார். ஆம், அஜித்தின் தன்னம்பிக்கைதான் அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. ஆனால், அஜித் தன்னை மட்டும் நம்பவில்லை. தன்னை சுற்றியிருப்பவர்களையும் அதே அளவுக்கு நம்பினார். அதுதான் அவரின் சக்சஸ் சீக்ரெட்டாகவும் இருக்கிறது. ஆக, அஜித் ரசிகர்களே உங்களையும் நம்புங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் நம்புங்கள்!