தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் நடிகர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித் தற்போது கார் ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் இதுவரை கிடைக்காத நிலையில், அவர் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
மங்காத்தா ட்ரெயிலர்:
தமிழ்நாட்டில் தற்போது ரீ ரிலீஸ் ஆகும் படங்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சூழலில், அஜித்தின் மிகவும் வெற்றிகரமான படமான மங்காத்தா படம் வரும் 23ம் தேதி மீண்டும் ரிலீசாகிறது. இதற்காக இந்த படத்தின் புதிய ட்ரெயிலர் சற்று முன் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட வெற்றி:
சூதாட்ட பணமான ரூபாய் 500 கோடியை கொள்ளையடிக்கும் கதைக்களமே இந்த படம் ஆகும். அஜித்தின் 50வது படமான மங்காத்தா 2011ம் ஆண்டு வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படம் அஜித்தின் திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கிய படம் ஆகும். தயாநிதி அழகிரியின் கிளவுட்நைன் மூவீஸ் தயாரித்த இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்தது.
தொடர்ந்து தோல்வி படங்களால் தவித்து வந்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மங்காத்தா படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார்.
நட்சத்திர பட்டாளங்கள்:
கதாநாயகனாகவே நடித்து வந்த அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், அஸ்வின், ப்ரேம்ஜி, மகத், ஜெயப்ரகாஷ், அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருப்பார்கள்.
இந்த படத்தில் அஜித்தின் வில்லத்தனமான நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினர். அவரது சால்ட் அண்ட் பெப்பர் லுக் தோற்றமும், வில்லத்தனமான நடிப்பும் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. அசல் தோல்விப்படமாக அமைந்த நிலையில், மங்காத்தா படம் அஜித்திற்கு புதிய பாதையை உருவாக்கி கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் பலரும் தங்களது வில்லத்தனமான நடிப்பைக் காட்ட மிகுந்த ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
மீண்டும் ஹிட் அடிக்குமா?
மங்காத்தா படம் 2011ம் ஆண்டு தன்னுடைய முதல் வாரத்திலே ரூபாய் 30 கோடியை தமிழ்நாட்டில் வசூல் செய்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அந்தாண்டு பெற்றது. தற்போதும் அதேபோல ஒரு வெற்றியை இந்த படம் பெறுமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக பராசக்தி படம் வெளியாகிய நிலையில், மங்காத்தாவையும் களமிறக்கப்படுவதாக ஏற்கனவே இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், சென்சார் விவகாரத்தில் சிக்கிய ஜனநாயகன் படம் தற்போது வரை ரிலீசாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.