அட்டகாசம் படத்தின் ரிலீஸின் போது ரசிகர்களின் அன்பை பார்த்து நடிகர் அஜித்குமார் கண் கலங்கியதாக இயக்குநர் சரண் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அட்டகாசம் படம்
கடந்த 2004ம் ஆண்டு சரண் இயக்கத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்த படம் “அட்டகாசம்”. இந்த படத்தில் பூஜா, சுஜாதா, கருணாஸ், வையாபுரி, பாபு ஆண்டனி என பலரும் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்த இப்படம் அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. ரசிகர்களை கவர்ந்த அட்டகாசம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற “தல போல வருமா” பாடல் இன்றளவும் அஜித் ரசிகர்களின் தேசிய கீதமாக உள்ளது.
இயக்குநர் சரண் அஜித் நடித்த காதல் மன்னன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து இந்த கூட்டணி அமர்க்களம், அட்டகாசம், அசல் என 4 படங்களில் இணைந்து பணியாற்றியது. இதில் அசல் தவிர மற்ற 3 படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.
ரீ-ரிலீஸில் கொண்டாட்டம்
இந்த நிலையில் 21 ஆண்டுகள் கழித்து அட்டகாசம் படம் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது.முன்னதாக கடந்த மாதம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ரீ-ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. இப்படியான நிலையில் இன்று நவம்பர் 28ம் தேதி மீண்டும் வெளியாகியுள்ள அட்டகாசம் படத்தைக் காண ரசிகர்கள் தியேட்டருக்கு திரண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படங்கள் ஒரு மாத இடைவெளியில் வெளியானது. எனினும் ரீ-ரிலீஸ் படங்கள் இன்றைய இளம் வயதினர் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் அட்டகாசம் படத்தை வெளியிட வேண்டும் என பலரும் கேட்டிருந்தனர். அதன்படி இப்படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் #AttagasamReRelease என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. அப்படம் வெளியான சமயத்தில் இருந்த நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குநர் சரணின் நெகிழ்ச்சிப்பதிவு
இந்த நிலையில் இயக்குநர் சரண் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அட்டகாசம் முதல் ரிலீஸுக்கு முதல் நாள் நள்ளிரவு, என் காரில் தல ! வற்புறுத்தலின் பேரில் தியேட்டர் தியேட்டராக ரகசிய நகர்வலம். கட்டவுட்டுகள், ஸ்டார்கள், ஃப்ளெக்சுகள், போஸ்டர்கள் என ரசிகர்கள் படு பிசி ! பார்த்த அவர் முகத்தில்சத்தியமாக தற்பெருமை இல்லை Only tears! நானே சாட்சி!” என தெரிவித்துள்ளார். இதனைக் கண்டு ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் தன் ரசிகர்கள் எப்போதும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என நினைப்பதில் அவருக்கு நிகர் அவரே என அஜித்தை புகழ்ந்து வருகின்றனர்.