தனது தாயார் இறப்பைத் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அனில் குமார் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பிரபல செய்தி ஊடகம் தங்களது தளத்தில் வெளியிட்டிருந்தது. அனுமதியின்றி தனது வீடியோவை பயன்படுத்தியதற்காக அந்த செய்தி நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து அனில் குமார் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் தாயாரான மோகினி மணி கடந்த மே 30 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக காலமானார். துபாயில் இருந்த நடிகர் அஜித் தனது தாயாரைப் பார்க்க துபாயில் இருந்து விமானத்தில் வந்து சேர்ந்தார். தமிழக முதல்வர் விஜய் நடிகை த்ரிஷாவுடன் அஜித் வீட்டிற்கு சென்று தனது இரங்கலை தெரிவித்தார். பல்வேறு ரசிகரக்ள் மற்றும் திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்திருந்தனர்.
நன்றி தெரிவித்து அனில் குமார் வீடியோ
தங்களது தாயார் இறப்பின் போது தனக்கும் தனது குடும்பத்திற்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அஜித்தின் அண்ணன் அனில் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். " என் தாயார் இறந்து 60 மணி நேரம் கடந்துள்ளது. இந்த நேரத்தில் எனக்கு ஆறுதல் கூறியும் இரங்கல் தெரிவித்தும் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 300 நபர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தீர்கள். வெறும் ஒரு எமோஜி அனுப்பி நாங்கள் உங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. உங்கள் அனைவரிடமும் தனித்தனியாக நான் என்னுடைய நன்றியைத் தெரிவிப்பேன். மீண்டும் என்னுடைய வேலைகளுக்கு திரும்பி என் அம்மாவின் பெயருக்கு பெருமை சேர்ப்பேன். " என அனில் குமார் இந்த வீடியோவில் பேசியிருந்தார்
அனுமதியின்றி வீடியோவை பயன்படுத்தியதால் சர்ச்சை
அனில் குமாரின் இந்த வீடியோவை பிரபல செய்தி நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பயன்படுத்தியிருந்தது. இதனால் கடுப்பான அனில் அந்த செய்தி நிறுவனத்தை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " என்னுடைய வீடியோவில் உங்கள் நிறுவனத்தின் லோகோவைப் பார்க்க எரிச்சலாக இருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கு முன்னாள் நீங்கள் என்னிடம் அனுமதி பெற்றீர்களா ? உங்களுடைய ஊடகவியல் வகுப்புகளின் போது காப்புரிமை மீறல் மற்றும் அறிவுசார் சொத்து திருட்டு குறித்த வகுப்புகளில் தூங்கிவிட்டீர்களா ? ஊடகங்களை மக்கள் தேவையில்லாமல் விமர்சிப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். " என அனில் இந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.
அனிலின் விமர்சனத்தைத் தொடர்ந்து இந்த வீடியோவை அந்த செய்தி நிறுவனம் தங்களது தளத்தில் இருந்து நீக்கியுள்ளது
