நான் இன்றைக்கும் தினக்கூலிக்காரன் தான் என பிரபல நடிகர் அபிஷேக் மோகன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஞானராஜசேகரன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான மோகமுள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அபிஷேக் சங்கர். இவர் அதன்பிறகு ஏராளமான படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள அபிஷேக் சங்கர், 2010ம் ஆண்டு கதை என்ற படத்தை இயக்கினார். இதனிடையே சின்னத்திரைக்கு வந்த அபிஷேக், 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் பாஸ்கர் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
இப்படி சின்னத்திரை, பெரியதிரை என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் சங்கர், நேர்காணல் ஒன்றில் தன் காதல் கதையை பற்றி பேசியுள்ளார். அதில், “எனக்கு இன்னைக்கு சினிமா பின்புலம் கிடையாது. நான் ஒரு தினக்கூலி வேலைக்காரன். நான் ஹீரோவா ஒரு படம் பண்ணிட்டேன். அது ரிலீசாகுமான்னு தெரியல. நான் மேற்கு மாம்பலத்தில் ஒருவருக்கு டிரான்ஸ்லேட் பண்ற வேலை பார்த்தேன். ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மொழிமாற்றம் செய்து கொடுத்தால் ஒரு பக்கத்துக்கு ரூ.5 என பணம் கிடைக்கும். ஒரு 10 பக்கம் பண்ணி கொடுத்து விட்டு கிடைக்கும் ரூ.50ல் நேராக தேவி தியேட்டர் செல்வேன். அங்க படம் பார்த்துவிட்டு அங்கே இருந்து நடந்தே சின்மயா நகர் வருவேன். படம் பார்க்க ரூ.2.90 காசு போக மீதி பணம் இருக்கும்.
அப்போது நான் மனைவியை காதலித்து கொண்டிருந்தேன். அவரோ மும்பையில் இருந்தார். அதனால் வாரம் ஒருமுறை போன் செய்ய, அந்த பணத்தை சேமித்து வைப்பேன். இப்படித்தான் போய் கொண்டிருந்தேன். ஆனால் மும்பையில் நான் பெரிய ஹீரோ என்ற இமேஜ் தான் இருந்தது.
நான் இசைப்பள்ளியில் தான் மனைவியை சந்தித்தேன். அவர் வயலின் இசையில் கைதேர்ந்தவர். ஒரு இசை திருவிழாவில் தான் சந்தித்தேன். முதல் பார்வையிலேயே காதலில் விழுந்தேன். அதன்பிறகே அவர் பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. நானோ ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். இப்பவும் அப்படித்தான் இருக்கிறேன்.
என்னை விட எல்லா விதத்திலும் உயர்ந்தவர். அதனால் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது என முடிவு செய்து விட்டோம். எப்போது வீட்டில் ஒத்துக் கொள்கிறார்களோ,அப்ப பார்த்துக்கலாம் என சொல்லி கிட்டதட்ட 8 ஆண்டுகள் காத்திருந்தோம். அவங்க வேற வழி இல்லாம என்னிடம் மாட்டிக் கொண்டார் (சிரித்தபடியே சொன்னார்)” என அபிஷேக் கூறியுள்ளார்.