அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் அப்பாஸ், தனது உடல் நலம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். 



அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மருத்துவமனையில் இருக்கும் போது எனக்கு மன அழுத்தம் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் நான் அங்கு இருந்த போது சில பயங்களை சமாளிக்க முயற்சி செய்தேன். என் மனதை மேம்படுத்த முயற்சி செய்தேன். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. விரைவில் வீடு திரும்புவேன். உங்களுடைய ப்ரார்த்தனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி! என்று நடிகர் அப்பாஸ் தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.






நடிகர் அப்பாஸ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கொல்கத்தாவில் பிறந்த இவர், மும்பையில் படித்து, பெங்களூரில் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கினார்.


1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலே அப்பாஸுக்கு பெரிய பெயர் கிடைத்தது, ரசிகர்கள் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர்கள் அவருக்கு அதிகமாக இருந்தனர். அப்பாஸ் நடித்த கதாபாத்திரத்திற்கு நடிகர் விக்ரம் தான் டப்பிங் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அப்பாஸ் படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், ஹே ராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே போன்ற பல மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார். 


2015 ஆம் ஆண்டு முதல் திரைத் துறையை விட்டுவிட்டு வெளிநாடு சென்று சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். 



சமீபத்தில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இனி சில மாதங்களுக்கு பைக் ரைடு செய்ய மாட்டேன் என வாக்கிங் ஸ்டிக் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.



இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன், அறுவை சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு நாளை செல்லவிருப்பதாகவும், அனைவரும் தனக்காக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்றும், விரைவில் அனைவரையும்  சந்திப்பதாகவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.