தமிழ் சினிமாவில் தேசத்தை காக்கும் தொடர்பான படங்களில் நடித்தவர்களில் மிக முக்கியமானவர் அர்ஜூன். அவர் இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் சினிமா பயணம் ஒரு ரீவைண்ட் செய்து பார்க்கலாம். 


சினிமாவில் அறிமுகம் 


கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் மகனான அர்ஜுன் 1981 ஆம் ஆண்டு வெளியான சிம்மதா மரி சைன்யா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். 1984 ஆம் ஆண்டு ராமநாராயணன் இயக்கிய 'நன்றி'  படத்தின் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தமிழ், கன்னடம் என மாறி மாறி நடித்து வந்த அர்ஜூனுக்கு  1985 அம் ஆண்டு வெளியான யார்? படம் திருப்புமுனையாக அமைந்தது. 


தொடர்ந்து சங்கர்குரு, தாய்மேல் ஆணை, படிச்ச புள்ள, சேவகன், ஜென்டில்மேன், கோகுலம், பிரதாப் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சேவகன் படத்திற்கு திரைக்கதை எழுதி படத்தை தயாரித்ததோடு, இயக்கவும் செய்தார். 


மறக்க முடியாத ஜெய்ஹிந்த் 


நன்றாக சென்று கொண்டிருந்த அர்ஜூன் வாழ்வில் மீண்டும் ஒரு மைல்கல்லாக அமைந்தது 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெய்ஹிந்த்’ படம். அப்படத்தில் தீவிரவாதிகளைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடித்த அவரே, படத்தையும் இயக்கியிருந்தார். தேசப்பற்றை மையமாகக் கொண்ட ஜெய்ஹிந்த் படம் இன்றைக்கும் குடியரசு தினம், சுதந்திர தினம் அன்று மறக்காமல் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 


1995 ஆம் ஆண்டு அர்ஜுன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் கர்ணா படத்தை இயக்கி நடித்தார். வித்யாசாகர் இசையமைத்து இப்படத்தில் இடம்பெற்ற ‘மலரே மௌனமா’ பாடல் சாகாவரம் பெற்ற மெலடி பாடல்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. 


மக்களின் முதல்வனாக அர்ஜூன் 


1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதப்பட்ட முதல்வன் படத்தில் அர்ஜூன் ஹீரோவாக நடித்தார். ஷங்கர்  இயக்கிய இப்படத்தை இன்று பார்த்தாலும் உண்மையில் அர்ஜுனைத் தவிர வேறு யாரும் அப்படத்தில் நடித்தால் நன்றாக இருந்திருக்காது என நினைக்க வைக்கும் அளவுக்கு கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தார். 


பின்னர் கண்ணோடு காண்பதெல்லாம், வானவில், ரிதம், ஏழுமலை, கிரி, அரசாட்சி, வாத்தியார்,மருதமலை பொம்மலாட்டம், வாத்தியார், ஆணை, துரை என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். அர்ஜூன் படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். அவருடைய உடற்கட்டும் இளைஞர்கள் பலருக்கும் இன்றும் இன்ஸ்பிரேஷனாக உள்ளது.  இதனாலேயே அவருக்கு ‘ஆக்‌ஷன் கிங்’ என்ற பெயரும் அடைமொழியானது. 


இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கிய அர்ஜூன் 


இதற்கிடையில் ஹீரோ இமேஜில் இருந்து விலகி, மெல்ல மெல்ல மிரட்டலான கேரக்டரில் நடிக்க தொடங்கினார். அஜித்தின் 50-ம் படமான 'மங்காத்தா', இரும்புத்திரை, கடல், ஹீரோ என பல படங்களில் நடித்த அர்ஜூன் தற்போது விஜய் நடித்துள்ள லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 


வயசே ஆகாதா என நினைக்க வைக்கும் இளமையான தோற்றமும்,  இயல்பான நடிப்புத் திறனும் தான் அர்ஜூனுக்கு பிளஸ் பாயிண்ட் ஆக உள்ளது. நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட அர்ஜூன் இன்னும் பல சாதனைகளை இந்தப் பிறந்தநாளில் மனதார வாழ்த்துவோம்.