ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சியை பார்க்கமுடியாமல் திரும்பிய ரசிகர்களில் இதுவரை 400 பேர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப் பட்டுள்ளது.
மறக்குமா நெஞ்சம்
சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் ’மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததால் பார்வையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பனையூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலர் உள்ளே செல்ல முடியாத நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிலர் டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டினர். நிகழ்ச்சியின் போது கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் சிலருக்கு மயக்கம், மூச்சித்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏ.ஆர். ரஹ்மானையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன.
ரஹ்மானுக்கு ஆதரவு
இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ரஹ்மான் தான் காரணம் என்றும் ரஹ்மான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இணையதளங்களில் பல்வேறு தரப்புகள் ரஹ்மானை விமர்சித்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் ரஹ்மானுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க முனவந்தார்கள். நடிகர் சரத்குமார், கார்த்தி, குஷ்பு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, என பலர் இந்த தவறு நடந்ததற்கு முழு காரணம் இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏ.சி.டிசி நிறுவனம் தான் என்றும் பலர் தங்களது ஆதரவை ரஹ்மானுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
மன்னிப்பு கோரிய ACTC நிறுவனர்
இந்நிலையில் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ACTC நிறுவனர் ஹேமந்த் இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் ” மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை இதற்கு முழுக்க முழுக்க நாங்களே பொறுப்பேற்றுக் கொள்கிறோம். இசை நிகழ்ச்சியை நடத்திக் கொடுப்பது மட்டுமே அவரது வேலை. அவர் அதனை சிறப்பாகவே செய்தார் அதனால் அவரைத் தாக்கி பதிவிட வேண்டாம் . டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை காணமுடியாமல் போனவர்களுக்கு நிச்சயம் பணம் திருப்பி அளிக்கப்படும்.” என அவர் கூறியுள்ளார்
பணம் வாபஸ்
இதனைத் தொடர்ந்து ரஹ்மான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் உள்ளே நுழைய முடியாமல் போனவர்கள், தயவுசெய்து உங்கள் டிக்கெட் வாங்கியதன் நகலை உங்கள் குறைகளுடன் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பகிரவும். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும்” என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் தங்களது டிக்கெட் நகலை அனுப்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது டிக்கெட் நகலை அனுப்பியுள்ள நிலையில் அவர்களில் 400 நபர்களுக்கு ரஹ்மான் பணத்தை திருப்பி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.