காதல் தேசம், ஆனந்தம், மின்னலே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து இளம்பெண்களின் மனதை கொள்ளையடித்தவர் அப்பாஸ். 90களில் வெளியான படங்களின் மூலம் சாக்லேட் பாயாக வலம் வந்தார். அப்போது வெளியான பல படங்களில் செகண்ட் ஹீரோ என்றால் அப்பாஸ் பெயர் தான் ஞாபகத்திற்கு வரும். திருட்டு பயலே படத்தில் வித்தியாசமான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக வில்லன் ரோலில் நடித்தார். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

அவர் நடித்த படங்களும் தோல்வி அடைந்ததால் மார்க்கெட் இல்லாத ஹீரோவாக மாறினார் அப்பாஸ். அதன் பின்னர் ஹார்பிக் விளம்பரத்தில் நடித்து ரசிகர்களு அதிர்ச்சி அளித்தார். திடீரென சினிமாவை விட்டு குடும்பத்திற்காக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். நியூசிலாந்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, பெட்ரோல் பங்கில் ஊழியராகவும், மெக்கானிக்காகவும், கால் டாக்ஸி டிரைவராகவும் பணியாற்றியதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு அப்பாஸ் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். 

இவர் கடைசியாக 2014ஆம் ஆண்டில் வெளியான ராமானுஜன் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஒரு புத்தம் புதிய நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்குகிறார். இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தில் அப்பாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பட்ததில் லவ்வர் பட நாயகி ஸ்ரீ கௌரி பிரியா ஹீரோேயினாக நடிக்கிறார். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் முழு நீள காமெடி கலந்த காதல் படமாக உருவாக இருக்கிறது. இன்று இப்படத்தின் படப்பிடிப்புடன் பிரம்மாண்டமான முறையில் பூஜை தொடங்கியது. இதனை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.