மலையாள திரைப்படங்கள் சமீப காலமாக அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 'ரோமன்சம்' என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்து கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஜித்து மாதவன். முதல் படமே அசத்தலான ஹாரர் திரில்லர் படமாக கொடுத்து அசர வைத்தார். தற்போது அவரின் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகியுள்ள திரைப்படம் 'ஆவேஷம்'. 


ஃபஹத் பாசில் கேங்ஸ்டராக நடித்துள்ள இப்படம் பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற படங்களின் வெற்றியையும் விட முன்னேறி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ரம்ஜான் தினத்தை முன்னிட்டு  இப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஒன் மேனாக  படம் முழுக்க கலக்கியிருந்தார் ஃபஹத் பாசில். அவருடன் சேர்ந்து ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.




கேரளாவை சேர்ந்த மூன்று மாணவர்கள் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க போக அங்கே சீனியர்கள் உடன் மோதல் ஏற்பட்டு அடிபடுகிறார்கள். சீனியர்களை பழிவாங்க வேண்டும் என ரவுடியை நாடுகிறார்கள் ஜூனியர்கள். அந்த காமெடி பீஸ் ரவுடி தான் ஃபகத் பாசில். இவர் கேங்ஸ்டரா அல்லது காமெடியனா என அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஃபகத் பாசில் இடைவேளைக்கு பிறகு பின்னி பெடலெடுக்கிறார்.



க்ளைமேக்ஸில் அவர் கெத்து காட்டுவது பார்வையாளர்களை மிரள வைத்து. அவர் வரும் காட்சி அனைத்துமே அடி தூள் ரகமாக பட்டையை கிளப்பியது. அவரை தவிர இந்த கேரக்டரை அவ்வளவு அசால்ட்டாக யாராலும் செய்து இருக்க முடியாது. கல்லூரி மாணவர்களாக நடித்துள்ள ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய்சங்கர், ரோஷன் மூவரும் அவர்களின் கதாபாத்திரங்களை தேவைக்கு ஏற்றவாறு நடித்திருந்தனர். பல கேரக்டர்களில் நடித்து அசத்திய ஃபகத் பாசில், இப்படத்தில் கேங்ஸ்டராக புதிய பரிணாமத்தில் அதகளப்படுத்தி இருந்தார். 




ஆக்‌ஷன், காமெடி  என ஒரு ஜாலியான திரையரங்க அனுபவத்தை கொடுத்த 'ஆவேஷம்' படம் வெளியாகி ஐந்து நாட்களை கடந்துள்ள நிலையில் உலகளவில் வெளியாகி இதுவரை 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்ட பட்ஜெட் என்னவோ 20 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2024ம் ஆண்டு துவங்கிய நாள் முதல் மலையாள சினிமா தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து தூள் கிளப்பி வருகிறது. அந்த வகையில் 50 கோடி வசூலை எட்டிய பிரம்மயுகம், மஞ்ஞும்மல் பாய்ஸ், பிரேமலு உள்ளிட்ட படங்களின் வரிசையில் பெருமையுடன் இணைந்துள்ளது 'ஆவேஷம்' திரைப்படம்.


இப்படத்தின் வசூல் வரும் நாட்களில் மேலும் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரை ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவதே அதற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.