நேரடி மலையாள சினிமாவிலும், அதனைத் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இந்த ஆண்டு மிகப்பெரும் வெற்றிபெற்று பேசுபொருளான திரைப்படம் பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் - தி கோட் லைஃப்.


160 கோடி வசூலித்த ஆடுஜீவிதம்


2009ஆம் ஆண்டு வெளியாகி கேரள அரசின் சாகித்திய அகாடமி விருது வென்ற ஆடுஜீவிதம் எனும் நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளியாக சவுதிக்கு சென்று அங்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் கொத்தடிமையாக மாட்டி அவதிக்குள்ளாகும் நஜீப் எனும் நபரை மையப்படுத்தி இக்கதை அமைந்திருந்தது. இந்தியன் 2 திரைப்படம் போலவே 2018ஆம் ஆண்டே இப்படப் பணிகள் தொடங்கப்பட்டு பின் கொரோனா ஊரடங்கில் முடங்கி, தொடர்ந்து பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் தடைகளைக் கடந்து வெளியானது.


மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக வெளியான ஆடுஜீவிதம் படத்தில் அமலா பால் நாயகியாக நடித்திருந்தார். பிரபல மலையாள இயக்குநர் ப்ளெஸ்ஸி இப்படத்தை இயக்கிய நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைத்திருந்தார். 82 கோடிகள் பட்ஜெட்டில் உருவான இப்படம் எதிர்பார்ப்புகளுக்கு பூர்த்தி செய்யவில்லை என ஒரு தரப்பினரும், மற்றொருதரப்பினர் நடிகர் பிருத்விராஜூக்கு தேசிய விருது தர வேண்டும், இந்த ஆண்டின் சிறப்பான படம் என்றும் பாராட்டினர். இப்படி கலவையான விமர்சனங்கள் ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் இப்படம் ரூ.160 கோடிகளை வசூலித்தது.


நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ரிலீஸ்


இந்நிலையில், மார்ச் மாத இறுதியின் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை எதிர்பார்த்து சினிமா ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், தி கோட் லைஃப் படம் வரும் ஜூலை 19ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.