தரமான சினிமாக்களை தொடர்ந்து வழங்கி வரும் மலையாள திரை உலகில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’.


கேரளாவில் இருந்து வேலை தேடி சவுதி அரேபியாவுக்கு  செல்லும் புலம்பெயர் தொழிலாளர் அங்கு ஆடு மேய்க்கும் அடிமையாக சிக்கிக் கொள்வதை பேசும் இந்தப் படத்தின் கதை, எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. 


இந்த நாவல் படமாக உருவாகின்றது என்ற தகவல் வெளியானதுமே இந்தப் படத்தின் மீதான ஆர்வம் சினிமா ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. இதில் என்னவென்றால் படத்தின் முதல் அறிவிப்பு கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது.  இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது. இது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பினை இன்னும் எகிறச் செய்தது. இந்நிலையில் இன்று அதாவது நவம்பர் 30ஆம் தேதி ஆடு ஜீவிதம் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இதுகுறித்த அறிவிப்பினை படத்தின் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் தனது ட்விட்டர் பக்கத்தில்,பகிர்ந்துள்ளார். அதில் படம் அடுத்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 






இந்தப் படத்தை பிருத்விராஜை வைத்து இயக்கப்போவதாக 2010ஆம் ஆண்டே இயக்குநர் ப்ளெஸ்ஸி அறிவித்த நிலையில், பின் பல காரணங்களால் இந்த முயற்சி தொடர்ந்து தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டு அதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தேசிய விருது தொடங்கி ஆஸ்கர் விருதுகள் வரை நிச்சயம் வாரிக்குவிக்கும் என சினிமா ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுகின்றது.