வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விடுதலை திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்கு ஆண்டுகளாக ரிலீசுக்காக காத்திருந்த விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று மக்களின் பேராதரவை பெற்றுள்ளது.
புதுமுக நாயகி பவானி ஸ்ரீ :
இதுவரையில் ஏராளமான திரைப்படங்களில் தனித்துமான நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்த நடிகர் சூரி, 'விடுதலை' படத்தின் மூலம் ஹீரோ பரிமாணத்தை எடுத்துள்ளார். அவரின் ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் பவானி ஸ்ரீ. இவர் ஏற்கனவே க.பெ. ரணசிங்கம், நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விடுதலை படத்தின் மூலம் ஹீரோயினாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அவருக்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏராளமான வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.வி. பிரகாஷ் தங்கை :
இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான இசைமைப்பளரான ஏ.ஆர். ரஹ்மான் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா. இவர் ‘சாக்லேட்’ படத்திற்கு இசையமைத்துள்ளார். 'மல மல மருதமலை...' பாடலின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் மிகவும் பிரபலமானவர். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும், தேசிய விருது பெற்ற பிரபலமான இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷின் தங்கைதான் நடிகை பவானி ஸ்ரீ. தாய் மற்றும் சகோதரரின் வழியில் அவர்களின் வீட்டில் இருந்து ஒரு நடிகையும் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளார். விடுதலை திரைப்படத்தில் பவானி ஸ்ரீ நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடுவதில் விருப்பமில்லாத வாரிசு :
இசை குடும்பத்தில் இருந்து வந்த பவானி ஸ்ரீக்கு பாடுவதில் பெரிய அளவு ஈடுபாடு இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் விடுதலை படத்தில் உள்ள இரண்டு பாடல்களிலும் அவர் இடம் பெற்றுள்ளார். ஒரு எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் என்பதை காட்டிலும் ஒரு நல்ல மெசேஜ் உள்ள ஒரு படத்தில் நடித்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி என்பதையும் பதிவு செய்துள்ளார்.
ஏ.ஆர்.ஆர் வாழ்த்து :
மேலும் தங்கையின் மகள் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளதை அடுத்து ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டர் மூலம் பவானி ஸ்ரீக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்துக்கு 'நன்றி மாமா!' என பதிலளித்துள்ளார் பவானி ஸ்ரீ.