ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியால் பெரும் போக்குவரத்து நெருக்கடியும், டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்க முடியாத நிலையும் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மறக்குமா நெஞ்சம்


சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் ’மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததால் பார்வையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பனையூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலர் உள்ளே செல்ல முடியாத நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிலர் டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டினர். 


நிகழ்ச்சியின் போது கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் சிலருக்கு மயக்கம், மூச்சித்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏ.ஆர். ரஹ்மானையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்து சமூக வலைதளங்களில்  கருத்துகள் பகிரப்பட்டன.


மேலும் இந்த குளறுபடிகளுக்கு  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனமே காரணம் என்றும் ரஹ்மான் ஒரு நல்ல நோக்கத்திற்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். ஆனால் ரசிகர்கள் அனைவரும் ரஹ்மானை விமர்சிப்பது சரியானது இல்லை என்று  ரஹ்மான் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். ரஹ்மானின் மகளான கதீஜா ரஜ்மான், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, சரத்குமார், குஷ்பு,  நடிகர் கார்த்தி  உள்ளிட திரைப் பிரபலங்கள் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.


பணம் வாபஸ்


இதனைத் தொடர்ந்து ரஹ்மான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்  “டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் நுழைய முடியாமல் போனவர்கள், தயவுசெய்து உங்கள் டிக்கெட் வாங்கியதன் நகலை உங்கள் குறைகளுடன் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பகிரவும். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும்” என தெரிவித்திருந்தார்.” இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது டிக்கெட் நகலை அனுப்பியுள்ளனர்.






 


இதுவரை மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது டிக்கெட் நகலை அனுப்பியுள்ள நிலையில் அவர்களில் 400 நபர்களுக்கு பணத்தை திருப்பி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து மீதி இருப்பவர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும் என ரஹ்மானின் ரசிகர்கள் நம்பிக்கையாக காத்திருக்கிறார்கள்.