தமிழ் சினிமா ரசிகர்களால் பிரபலமாக அறியப்பட்ட இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், கஜினி, கத்தி, ஏழாம் அறிவு, ரமணா, துப்பாக்கி, தீனா போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ஏ.ஆர். முருகதாஸ் அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டு 2020ம் ஆண்டு இயக்கிய திரைப்படம் 'தர்பார்'.
ஆனால் இப்படம் வசூல் செய்தாலும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் தோல்வியை தழுவியது. அந்த வகையில் தர்பார் படத்தின் தோல்வி குறித்து சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் மிகவும் வெளிப்படையாக பேசியிருந்தார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். அவர் இதுவரையில் இயக்கிய படங்களில் தோல்விகளை சந்தித்த இரண்டு திரைப்படங்களில் ஒன்று ஸ்பைடர் மற்றொன்று தர்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெருக்கடியில் சொதப்பிய தர்பார் :
நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த தர்பார் திரைப்படம் தோல்வி பற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில் "பிப்ரவரியில் தான் இப்படம் குறித்த பேச்சுவார்த்தையை நடத்தினோம். மார்ச் மாதமே படத்தின் படப்பிடிப்பை எடுக்க துவங்கிவிட்டோம். மார்ச் மாதம் மும்பையில் மழைக்காலம் என்பதால் அதற்குள் படப்பிடிப்பை அங்கு முடித்துவிட வேண்டும் என்பதற்காகவும் ஆகஸ்ட் மாதம் ரஜினி சார் கட்சி துவங்க உள்ளார் என்பதால் படப்பிடிப்பை வேகவேகமாக முடித்தோம். ரஜினி சார் நடிக்கும் கடைசி திரைப்படம் இது, அதற்கு பிறகு அவர் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளார் என கூறப்பட்டதால் அந்த வாய்ப்பை நான் எந்த காரணம் கொண்டும் தவற விட்டுவிட கூடாது என்ற எண்ணத்தில் அதற்கு நான் ஒப்புதல் அளித்தேன்.
டைம் லிமிட் இருக்கக்கூடாது :
நேரமின்மை காரணமாக படத்தின் திரைக்கதையை சரியாக திட்டமிட முடியாமல் போனது. எப்படியாவது ரஜினி சார் வைத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் என முழுமையாக முயற்சி செய்தேன். ஆனால் அது முடியாமல் போனது. எப்போதுமே ஒரு படத்தை போதிய அளவு டைம் எடுத்து பொறுமையாக எடுக்க வேண்டும். அதற்கு டைம் லிமிட் கொடுத்து நெருக்கடியில் எடுக்கப்பட்டால் படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் தோல்வி அடையும்" என்றார். ஏ.ஆர். முருகதாஸ் அவரால் முடிந்த அளவு சிறப்பான பங்களிப்பை கொடுத்த இருந்தாலும் 'தர்பார்' படம் கைகொடுக்கவில்லை. இது அவருடைய தவறான முடிவு என பிறகு தான் யோசித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ஸ்டைலான பேச்சு, நயன்தாராவுடன் காம்போ காட்சிகள் இப்படி கதையை கொஞ்சம் சூடேற்றினாலும் வழக்கமான திரைக்கதை கொஞ்சம் சொதப்பலாக ரஜினிக்கேற்ற திரைக்கதை அமையாததால் அது தோல்வியை தழுவியது.