மீரா ஜாஸ்மின், தமிழ், மலையாளத் திரைப்படங்களில் மணம் வீசிக் கொண்டிருந்த மீரா ஜாஸ்மின் யார் கண் பட்டதோ ஒதுங்கிப் போனார். இப்போது, சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ரீ என்ட்ரி கொடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காதல் பிசாசே... காதல் பிசாசே பாடலை மீராவுக்கு ரசித்தவர்கள் தான் ஏராளம் என்று அடித்துச் சொல்லலாம். மேடி ரசிகர்களும், வித்யாசாகர் ரசிகர்களும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க. உண்மையை சொல்லித்தானே ஆகணும். குட்டையான தோற்றம், குண்டு குண்டு கண்கள், குறும்புப் பார்வை, துடிப்பான நடிப்பு, அழுத்தமான உடல் மொழி, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் நேர்த்தி என நடிப்பு ராட்சஸியாக இருந்தவர் மீரா ஜாஸ்ம்னின்.
திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு முழுக்கு போட்டார் தேசிய விருது பெற்றார் அந்த தாவணி போட்ட தீபாவளி.
ஆனால், இந்த தீபாவளியை ஒட்டி அவரைப் பற்றி ஒரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. துபாயின் வசிக்கும் அவர் ஐக்கிய அரபு எமீரகத்திடமிருந்து கோல்டன் விசா பெற்றுள்ளாராம். இது நீண்ட கால பயணத்துக்கான ஒருவகை பிரத்யேக விசா. மலையாளத் திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் யுஏஇ அரசின் இந்த கோல்டன் விசாவை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது ரீஎட்ரி குறித்து மீரா ஜாஸ்மின் மனம் நெகிழ்ந்து பேசியுள்ளார். அதில், "நான் ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டேன். இனி நான் சினிமாவில் சுழன்றுவரப் போகிறேன். ஆனால், நான் தேர்வு செய்யும் கதைகள் தனித்துவமானதாக இருக்கும். ஏற்கெனவே சத்யன் அந்திக்காடுடன் நான் 4 படங்கள் செய்துள்ளேன். இது அவரது ஐந்தாவது படம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேலும், ஆசிர்வதிக்கப்பட்டவளாய் உணர்கிறேன்.
ஒரு கலைஞராக பல்வேறு கதைக்களங்களையும் எக்ஸ்ப்ளோர் செய்து பார்க்க வேண்டும். ஒரு படத்தின் கரு தான் அதன் உயிர். ரசிகர்களை எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ரசிகர்கள் தங்களின் கூரிய நுட்பத்தால் வித்தியாச கதைக்களங்களையே சீர்தூக்கி ரசிக்கின்றனர். அவர்களை சாதாரண கதைக்களத்தால் சமாதானப்படுத்திவிட முடியாது. அதில் அவர்கள் சமரசமாக மாட்டார்கள்.
சத்யன் அந்திக்காடுடன் நான் ஏறெகனவே 4 படங்கள் செய்திருந்தாலும், இந்தப் படத்தை அவற்றுடன் ஒப்பிட முடியாது. இந்தப் படத்தில் எனக்கு முழுவதும் வித்தியாசமான கதாபாத்திரம். இது எனக்கு ஒரு புதிய துவக்கம்" என்றார்.
மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் பிரபல இயக்குநர் லோகிதாஸின் சூத்ரதாரன் என்ற படம் மூலம் அறிமுகமானார்.
இப்போது மீரா ஜாஸ்மின் ஒப்பந்தமாகியுள்ள சத்யன் அந்திக்காடு இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெயராம் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்கு இப்போது எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.