எப்போதும் கார்த்திக் சுப்பராஜின் படங்களைப் பற்றி பேசினால் அதில் “நல்லாருக்கு ஆனா....என்பது போல் நிறைவில்லாத ஒரு உணர்வு ரசிகர்களுக்கு இருப்பதை கவனிக்கலாம். முழுமையான ஒரு கதையைவிட, ஒரு கதையின் தொடக்கப்புள்ளியால் அதிகம் ஈர்க்கப்பட்டு ஏதோ ஒரு கட்டத்தில் திரைக்கதையில் அந்த சிறிய அம்சமும் நீர்த்துப் போகும் அனுபவமே அவரது படங்களில் இருக்கின்றன.


அதே நேரத்தில் கார்த்திக் சுப்பராஜூக்கு அதிகம் ஈர்க்கப்படும் இயக்குநர்களான மார்ட்டின் ஸ்கார்செஸி மற்றும் டரண்டினோ பாணியிலான காட்சியமைப்புகளில் இருக்கும் அவரது ஆர்வமே, அவரது படங்களை கோர்வையாகவும் முழுமையான ஒரு அனுபவமாக மாற்றவும் தவறுவதற்கான காரணங்களாக இருக்கின்றன.




சினிமாவில் தேர்ச்சி பெற்றுவிட்ட ஒரு பாவனையைவிட, சினிமாவில் கற்றுக் கொண்டிருக்கும் ஒரு மாணவராகவே இருக்கும்போது தான் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இன்னும் சுதந்திரமாகவும் தன்னை மீறிய ஒரு படைப்பையும் இயக்குகிறார். ஜிகர்தண்டா முதல் பாகமும் இரண்டாவது பாகமும் கிட்டத்தட்ட அந்த மாதிரி ஒரு மனநிலையில் இருந்து உருவான படங்களாக இருக்கின்றன.


ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


’நீ தேர்ந்தெடுப்பது அல்ல கலை
கலைதான் உன்னை தேர்ந்தெடுக்கிறது.’


இந்த வரிகளில் இருந்து தொடங்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X) படத்தை சுருக்கமாக இப்படி சொல்லலாம்! சினிமா என்கிற கலை வடிவம் இரு மனிதர்களுக்கு தங்களது விருப்பு வெறுப்புகளைத் தாண்டி அவர்களின் வாழ்க்கைப்ன் பாதையை தீர்மானிக்கிறது. தன்னுடைய நிலத்தில் இருந்தும், மக்களிடம் இருந்தும் விடுபட்டு அவர்களுக்கு எதிரான கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் அல்லியன் சீசர் (ராகவா லாரன்ஸ்) தன்னுடைய மக்களுக்காக போராடும் ஒருவனாக மாறுகிறான். அதே நேரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன்னுடைய லட்சியத்தை இழந்த கிருபை ( எஸ் ஜே சூரியா) தன்னுடைய பகையை மறந்து புதிய லட்சியம் ஒன்றை கண்டுபிடிக்கிறான்.

சினிமா மக்களின் மீது செலுத்தியிருக்கும் தாக்கத்தை உலகத்தின் எந்த இரு முனைகளில் இருந்து தொடர்புபடுத்தினாலும் அது நம்பும்படியாக இருக்கும் என்பதே இந்த ஊடகத்தின் மிகப்பெரிய பலம்.
ஹாலிவுட் இயக்குநர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் மதுரைக்கு வந்தார் என்று படத்தில் வரும்போது அதனால் தான் அது நிச்சயிக்கப்பட்ட ஒரு உண்மையாக நமக்கு தோன்றுகிறது.


கதை


அல்லியன் சீஸர் - ராய் தாஸ் கிருபை



1970களில் தொடங்கும் கதை அரசியல் சூழல், சினிமா கலாச்சாரம் அதில் இருக்கும் மனிதர்கள் என அடுத்து நடக்கப்போகும் மூன்று மணி நேர படத்திற்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காட்சிகள் சற்று அவசர கதியில் ஓடுவதாக தோன்றினாலும், இரண்டாம் பாதியில் கதையின் போக்கை தீர்மானிக்கும் போக்காய் அமைகின்றன.


போலீஸ் ஆக வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் கிருபை, அரசியல்வாதி ஒருவரின் அடியாளாக இருக்கும் அல்லியன் சீஸர். சீஸரின்  பெயரில் தொடங்கி அவரது செயல்கள் ஒவ்வொன்றிலும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறார். அதற்கு ஒரு பின்கதை இருக்கிறது. எந்தக் கருணையும் இல்லாமல் கொலை செய்யும் ஒருவராக இருக்கிறார் சீஸர். அவர் கருணை காட்டாததற்கு ஒரு பின்கதை இருக்கிறது. எப்படியாவது அவரை கொலை செய்ய வேண்டும் என்று துடிக்கிறது ஒரு கும்பல்.


மறுபக்கம் செய்யாத ஒரு தவறுக்காக சிறைக்குச் செல்லும் கிருபை ( இதற்கும் ஒரு பின்கதை இருக்கிறது) தன்னுடைய லட்சியமான போலீஸ் வேலையை இழக்கிறார். சிறையில் இருந்து வெளியே வர அவருக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு ரவுடியான அல்லியன் சீஸரை கொலை செய்வது.



உள்கட்சி அரசியல் - காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் பகடைக்காயாக அனுப்பி வைக்கப்படும் கிருபை, சீசரை கொல்ல சினிமா எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார். அதே நேரத்தில் மறுபக்கம் தன்னுடைய நிறத்தால் சீண்டப்படும் சீஸர் கருப்பு நிறத்தில் முதல் கதாநாயகனாக வேண்டும் என்று சினிமாவில் களமிறக்க தீர்மானிக்கிறார்.


இப்படி இரு நபர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக தேர்ந்தெடுக்கும் ஒரு கருவி சினிமா. அல்லது எங்கோ மூலையில் இருக்கும் இரண்டு நபர்கள், பல்வேறுகட்ட மனிதர்களைக் கடந்து அவர்களை ஒன்றிணைக்கிறது சினிமா. படத்தின் அடுத்த சில நிமிடங்கள் அட்டகாசமான தொடர் நகைச்சுவைக் காட்சிகளால் நிறைந்திருக்கிறது. தான் உருவாக்கிய உலகத்திற்குள் இருந்து மிக இயல்பாக நகைச்சுவையையும் வசனங்களையும் வார்த்தெடுத்திருக்கிறார் கார்த்திக். இந்தக் காட்சிகளில் நடிகர்கள் குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா தன்னை ஒரு தேர்ந்த நடிகனாக வெளிப்படுத்துகிறார்!


கார்த்திக் சுப்பராஜ் டச்!




கார்த்திக் சுப்பராஜ் சினிமா மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்திக் கொள்ளும் இடங்களும் இவைதான். தன்னை சத்யஜித் ரேவின் மாணவன் என்று எஸ்.ஜே.சூர்யா சொல்வதும், பதேர் பாஞ்சலி படத்தை பாதாள பாஞ்சாலி என்று சொல்வதும், முதல் முறை ஆக்‌ஷன் சொல்லும்போது எஸ்.ஜே.சூர்யாவிடம் ஏற்படும் பரவசம், அதேபோல் முதல்முறை கேமராமுன் நடிக்கும்போது லாரன்ஸின் பரவசம் என ரேஸுக்கு தயாராகும் பைக் மாதிரி ஆக்ஸலேட்டரை மெல்ல முறுக்கிக் கொண்டே வருகிறார்.


மேற்கு நாடுகளில் கலையின் பொதுவான அம்சங்கள் கலைக்கும் மனிதனுக்குமான உறவு பற்றிய எக்கச்சக்கமான படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இந்திய சினிமாவில் இது இன்னும் ஆழமாக பேசப்படாத ஒரு கருப்பொருள். இப்படி சொல்லலாம் கலையைப் பற்றிப் பேசும் கலை படைப்புகள் சமீப காலங்களில் அதிகம் வரத்தொடங்கி இருக்கின்றன.


கொஞ்சம் கொஞ்சமாக தங்களையும் அறியாமல் சினிமாவுக்காக தங்களது இயல்பில் மாற்றங்களை செய்துவருகிறார்கள். லாரன்ஸின் மனைவியாக வரும் நிமிஷா குறைவான இடங்களில் வந்தாலும் கதையை உணர்வுப்பூர்வமாக நகர்த்துவதற்கு மிக சாதகமாக்கிக் கொள்கிறார் இயக்குநர்.


விளையாட்டு போதும் என்று படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தான் இடைவேளைக் காட்சி. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பின் நிச்சயமாக ஒருவரால் சொல்லிவிட முடியும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மிக ஸ்டைலிஸ்டிக்கான தனித்துவமான ஒரு காட்சி இந்தப் படத்தின் இடைவேளைக் காட்சி என்று.


இரண்டாம் பாதி


ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இரண்டாம் பாதியை மட்டும் தனியாக காட்டி இது எந்த இயக்குநரின் படம் என்று கேட்டால் இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை இயக்குநர்களின் பெயர்களையும் ஒருவர் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் கார்த்திக் சுப்பராஜ் படம் என்று சொல்வார்கள் என்று கற்பனை செய்துபார்க்க முடியவில்லை.




எந்த அளவிற்கு நகைச்சுவை, காட்சியமைப்பு என முதல் பாதியில் இருந்த ட்ரீட்மெண்ட் இருந்ததோ அதற்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத ஒன்றாக இரண்டாம் பாதி அமைந்திருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படங்களில் அதிகம் உணர்ச்சிவசமான காட்சிகளும் அரசியல் பேசும் காட்சிகளும் கொண்ட  படமும் இதுதான்.


அமேதியஸ் என்கிற ஒரு ஆங்கிலப்படம் இருக்கிறது. புகழ்பெற்ற இசைக்கலைஞரான மொஸார்டின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்தப் படம். இசைஞானி இளையராஜா தனக்கு மிகப் பிடித்தப் படம் என்று இந்தப் படத்தை குறிப்பிட்டிருக்கிறார். இசையில் மாஸ்டரான மொஸார்ட்டை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார் அவருடைய போட்டியாளராக இருக்கும் சாலியரி என்பவர்.


துன்பமான ஒரு ஒபெரா நாடகத்தை எழுதிக் கொண்டிருக்கும் மொஸார்டிற்கு உடல் சரியில்லாமல் போகிறது. உடல்நிலை சரியில்லாத மொஸார்ட் ஒரு கட்டத்திற்கு மேல் சாலியரியை தான் எழுதும் இசைக் குறிப்புகளை மேற்பார்வையிட்டு தனக்கு ஆலோசனை கொடுக்குமாறு கேட்கிறார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் சாலியரி மொஸார்ட் என்ன இசைக் குறிப்பு எழுதினாலும் அதை நிராகரித்து இன்னும் தீவிரமான ஒரு இசையை உருவாக்கும்படி அவரை வற்புறுத்துகிறார்.


எவ்வளவு துன்பமான வலி நிறைந்த ஒரு இசையை மொஸார்ட் உருவாக்க முயற்சிக்கிறாரோ அதே அளவிற்கு அவருக்கு உடல் மோசமாகிக் கொண்டே போகிறது. சாலியரி விரும்புவதும் இதை தான். தன் கையாலேயே மொஸார்ட்டை தன் மரணத்தை இசையாக எழுத வைக்கிறார் அவர். மொஸார்ட் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது இறுதிக்காலம் வரை இந்த குற்றவுணர்ச்சியில் தவிக்கிறார் சாலியரி.

முதல் பாதியில் ராகவா லாரன்ஸை எஸ் ஜே சூர்யா பழிவாங்கத் திட்டமிட்டு இடைவேளை விடும்போது இரண்டாம் பாதி அமேதியஸ் மாதிரியான இரு கதாபாத்திரங்களுக்கு இடையிலான உளவியல் ரீதிலியான பனிப்போரை நாம் எதிர்பார்ப்பதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன.




மேலும் கதைசொல்லலில் ஏதாவது ஒரு வகையில் புதுமையை உருவாக்க நினைக்கும் கார்த்திக் சுப்பராஜுக்கு தீனி போடும் அத்தனை சாத்தியங்களும் இரண்டாம் பாதியில் இருக்கின்றன. ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அறிவார்ந்த அணுகுமுறைகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு முழுக்க முழுக்க உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் இயக்குநர்.


மக்களை நேரடியாக தொடர்புபடுத்தும் வகையில் சமூக அரசியல் பின்னணியில் இந்தப் படத்தை நகர்த்தியிருப்பது எதிர்பார்க்காதது என்றுதான் சொல்ல வேண்டும். பழங்குடி மக்களின் வாய்மொழிக் கதைகள் , அவர்களின் நம்பிக்கை அவர்களின் கடவுள் என இந்தக் காட்சிகளில் நேர்மறையான நாடகமாடிய (டிராமா) தருணங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன.


அல்லியனோ கிருபையோ அவர்களின் ரட்சகனாக இருப்பதில்லை. இந்த எல்லாக் காட்சிகளிலும் இருக்கும் கேமராவே அவர்களின் ரட்சகனாக மாறுகிறது. சினிமா ஒரு நவீனத் தொன்மமாக மாறும் மிகச் சிறப்பான ஒரு இடம். அல்லியன் சீசர் தன்னுடைய மக்களுக்காக போரடும் ஒருவனாக மாறுகிறான். கிருபை தன்னுடைய தனிப்பட்ட பகையை மறந்து மிகப்பெரிய நீதி ஒன்றுக்கு சாட்சியாகிறார்.


 என்ன மைனஸ்?


முடிந்த அளவிற்கு ஒரே கோட்டில் இல்லாமல் தன்னுடைய கதையை பல முனைகளில் இருந்து பின்ன முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் ஒரு சில இடங்களில் தேவைக்கு அதிகமான டீட்டெய்லிங் படத்தில் இருப்பதுபோலவும் ஒரு உணர்வு ஏற்படுகிறது.


ஒரே காட்சிகள் சில இடங்களில் இரண்டு முறை வருவது. கதாபாத்திரங்களில் எல்லா செயல்களுக்கும் ஒரு காரணத்தை வைக்க முயற்சிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் ரசிகர்கள் எதிர்பார்க்காத இடங்களிலும் அவை வருவதால் ஒரு சின்ன சலிப்பும் உருவாகிறது. பல இடங்களில் பக்கபலமாக இருந்த சந்தோஷ் நாராயணனின் இசை ஒரு சில இடங்களில் துருத்திக் கொண்டும் தெரிகிறது.


ராகவா லாரன்ஸ் தன்னுடைய எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்துபவர், இந்தப் படத்தில் தன்னை மீறாமல் இருக்க முயற்சித்தது ஒரு நடிகன் தனக்கு வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கட்டுப்பாடாக இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவை இன்னும் இன்னும் பார்க்கவேண்டும் என்பது போல் ஒரு அனாயாசத்தை அவரது உடல்மொழியில் கொண்டுவருகிறார்.


1970 களில் அரசியல் சூழலின் நகலை இன்னும் சற்று மிகையான த்வனி இல்லாமல் எதார்த்தமாக காட்டியிருக்கலாம். கிராஃபிக்ஸ் அதிகம் பயன்படுத்தப்பட்ட காட்சிகளில் எழுத்து இன்னும் கச்சிதமாக இருந்திருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கார்த்திக் சுப்பராஜின் துடுக்குத் தனத்தை இரண்டாம் பாதியில் பார்வையாளர்கள் கொஞ்சம் மிஸ் செய்கிறார்கள்.


சினிமாவால் மாறிய மூன்று நபர்கள்




படத்தின் தொடக்கத்தில் வருவதுபோல் கலைதான் உன்னை தேர்வு செய்கிறது. அல்லியனை தேர்வு செய்யும் கலை, அவனை தன்னுடைய வேர்களை அறிந்து அதற்காக போராடும் ஒருவனாக மாற்றுகிறது. கிருபையை தன்னுடைய பகையை மறந்து புது லட்சியம் ஒன்றை அவனுக்கு காட்டுகிறது. சினிமா என்கிற கலை மூன்றாவது மனிதன் ஒருவனையும் தேர்வு செய்து அவனையும் மாற்றியிருக்கிறது. தன்னுடைய ஆதர்சங்களை எல்லாம் விட்டு விலகி, கதையின் போக்கில் தன்னை இழந்து, அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் ஒரு படத்தை கார்த்திக் சுப்பராஜை இயக்க வைத்திருக்கிறது சினிமா!

மிகக் ஆக்ரோஷமாக எய்தப்பட்டு இலக்கை தவறவிட்டாலும், ஆழமான காயம் ஒன்றை ஏற்படுத்திவிட்டுச் செல்லும் அம்பு ஜிகர்தண்டா. கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ரெண்டாவது ரவுண்டை தொடங்கிவிட்டார்!