தமிழ் சினிமாவில் 80களில் மிகவும் பிஸியான ஒரு நடிகையாக இருந்தவர் ஜீவிதா. ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர். உறவு காத்த கிளி, சுகமான ராகங்கள், பாடும் வானம்பாடி என பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு திரைப்படத் துறையை சேர்ந்த நடிகர் ராஜசேகர் என்பவரை 1991ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட நடிகை ஜீவிதா நடிப்பதை தாண்டி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
33 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி:
கடந்த 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் நடிகை ஜீவிதா ராஜசேகர். அவர் மீண்டும் நடிப்பது குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். நடிகை ஜீவிதா ரீ -என்ட்ரி கொடுப்பது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'லால் சலாம்' திரைப்படத்தில். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து நடிகை ஜீவிதா பேசுகையில் " சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நான் இதுவரையில் எந்த படத்திலும் நடித்ததில்லை. லால் சலாம் திரைப்படம் மூலம் அவருடன் இணைந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னுடைய நீண்ட நாள் தோழி. இப்படத்தில் நடிப்பது குறித்து பல நாட்களாக ஆலோசனை நடைபெற்றது. நான் சம்மதம் தெரிவிக்க பல நாட்கள் எடுத்துக்கொண்டேன். என்னுடைய குடும்பத்தின் சம்மதமும் ஆதரவும் இல்லாமல் என்னால் நடிப்பது சாத்தியமில்லை. அதனால் நான் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்" என்றார் ஜீவிதா.
ரஜினியின் தங்கை :
திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் நான் மார்ச் 7ம் தேதி முதல் இணைகிறேன். ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளன. இப்படத்தில் நான் அவரின் தங்கை போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அதற்கு மேல் என்னுடைய கதாபாத்திரம் குறித்து நான் விளக்கி கூற முடியாது " என்றும் தெரிவித்துள்ளார்.