தமிழ் சினிமாவின் பழம்பெரும் மற்றும் மிகவும் பெருமைவாய்ந்த ஒரு திரைப்பட நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் தனது சொந்த ஊரான காரைக்குடியில் திரைப்பட ஸ்டுடியோவை நிறுவியது. இதுவரையில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ள இந்த பழமையான நிறுவனத்தின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் 1948ம் ஆண்டு வெளியான 'வேதாள உலகம்' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 75 ஆண்டுகளை நிறைவு செய்து பவளவிழாவை கொண்டாடுகிறது.
கற்பனை கதை:
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய 'வேதாள உலகம்' நாடகத்தின் கதையை தழுவி பி. நீலகண்டனால் திரைக்கு மாற்றியமைக்கப்பட்ட இந்த கற்பனை கதையை ஏ.வி. மெய்யப்ப செட்டியார் இயக்கினார். பேய் தேசத்தை ஆளும் சக்தி கொண்ட புத்தகத்தைப் பற்றிய இந்த கற்பனைக் கதை பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு மாறுபட்ட புதிய அனுபவத்தை கொடுத்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் விளிம்பில் இருந்த மக்களின் மனதில் உற்சாகத்தையும் பரப்பும் விதத்தில் படமாக்கப்பட்டு இருந்தது.
முழுக்க முழுக்க காரைக்குடி ஏவிஎம் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. முழுப் படமும் கறுப்பு & வெள்ளை நிறத்தில் இருந்தபோதும், கடைசி காட்சிக்கு வண்ணம் தீட்டப்பட்டது. இது பார்வையாளர்களுக்கு 'கட்டாயம் பார்க்க வேண்டிய' படமாக அமைந்தது.
வணிக ரீதியாக வெற்றி :
டி.ஆர்.மகாலிங்கம் , கே. சாரங்கபாணி , மங்கலம், கே.ஆர்.செல்லம் மற்றும் சி.டி.ராஜகாந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி 1948ம் ஆண்டு வெளியாகி அந்த காலகட்டத்திலேயே வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படமாக அமைந்து.
கதை சுருக்கம் :
ராணியின் பூஜை அறையில் இருந்த ஒரு புத்தகத்தை பார்க்கும் ராஜசிம்மனுக்கு அசுர ராஜா மூன்று கட்டளைகளை வழங்குகிறார். அந்த கட்டளைகளை நிறைவேற்றும் ஒருவருக்கு ராஜ்யத்தையும் இளைய மகள் ராஜீவியையும் பரிசாக அளிப்பார் என கூறப்பட்டது. ராஜீவியின் உருவம் ராஜசிம்மனைக் கவரவே அவர் இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறார்.
மேலும் ராஜசிம்மன் தந்தை 18 ஆண்டுகளுக்கு முன்னர் அசுர லோகத்திற்குச் சென்றதை பற்றியும், மன்னரின் கட்டளையை நிறைவேற்றாத மனிதர்களை காப்பாற்ற சென்ற இடத்தில சபிக்கப்பட்டது குறித்தும் தாயின் மூலம் கேட்டறிகிறான். அதனால் ராஜசிம்மன் தனது தந்தையை மீட்பதற்காக நண்பன் ததனுடன் அரக்க உலகத்திற்கு படையெடுக்கிறான். அங்கு சென்று ராஜசிம்மன் தனது தந்தையை மீட்டானா? இளைய ராணி ராஜீவியை கரம் பிடித்தானா? ராஜ்யத்தை அடைந்தானா? என்பது தான் படத்தின் கதைக்களம்.
வேதாள உலகம் படத்தின் படத்தொகுப்பை எம்.வி. ராமனும், ஒளிப்பதிவை டி. முத்துசாமியும் கையாள ஆர்.சுதராசனம் இசையமைத்து இருந்தார். "கல்வியில் சிறந்த தமிழ் நாடு", "தூண்டிற் புழுவினை போல்", "ஓடி விளையாடு பாப்பா" மற்றும் "தீராத விளையாட்டுப் பிள்ளை" உள்ளிட்ட பாடல்களின் வரிகளை மகாகவி சுப்ரமணிய பாரதியார் எழுதி இருந்தார்.
ஏ.வி.எம் நிறுவனம் இந்த கற்பனை உலகத்தை முற்றிலும் தனது நிறுவனத்திலேயே ஏ. பாலுவால் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.