சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சியம்மா விழா நடைபெற்ற இடத்தில் அய்யப்பனும் கோஷியும் படத்தின் பாடலை பாடிக் காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.இந்த 68வது தேசிய விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தமிழில் அதிகப்பட்சமாக நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகளைப் பெற்றது.
இதேபோல் வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் சில பெண்களும் படம் 3 பிரிவுகளிலும், மண்டேலா படம் 2 விருதுகள் என மொத்தம் 10 விருதுகளை அள்ளியது. அதேசமயம் மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் படம் சிறந்த இயக்குநர், பின்னணி பாடகி, சிறந்த துணை நடிகர், சிறந்த சண்டைக்காட்சி வடிவமைப்பு ஆகிய 4 விருதுகளை வென்றது.
இதில் களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக் பாடலை பாடிய பின்னணி பாடகி நஞ்சியம்மா விருதுப்பெற்ற போது கூட்ட அரங்கில் இருந்த அனைவருமே எழுந்து நின்று கைத்தட்டினர். மேலும் அவர் விருது பெறும் போது மேடையில் “பழங்குடியின மக்களின் நாடோடிப் பாடலைப் பாதுகாத்து திரையில் அதற்கு உயிர்கொடுத்தவர். மேலும் இந்தியாவின் வளமான பழங்குடி சமூகங்களின் கலை வடிவத்தை, அதன் இயல்பான தன்மையுடன் வழங்கியவர் என புகழாரம் சூட்டப்பட்டது. தேசிய விருதை இயல்பு மாறா சிரிப்போடு நஞ்சம்மா பெற்றுக் கொண்டார்.
இதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தேசிய விருதை பெற்றபின் நஞ்சியம்மா அங்கு தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகை ஆஷா பரேக், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் எந்த பாடல் விருது பெற காரணமாக அமைந்ததோ அந்த பாடலை பாடிக் காட்டி அசத்தினார். அவரின் குரலைக் கேட்டு கைகளில் தாளம் போட்ட சுற்றியிருந்தவர்கள் நஞ்சியம்மாவை பாராட்டி புகழ்ந்து தள்ளினர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.