இருட்டில் இருந்த தமிழ் சினிமாவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகிப்பவர் இயக்குநர் பாலுமகேந்திரா. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானார். சுமார் 23 படங்களை இயக்கிய பாலு மகேந்திரா தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்றால் அது மிகையல்ல. திரைப்பட கலையை முறையாக பயின்ற ஒரு சில இயக்குநர்களில் ஒருவர். அவரின் திறமை என்ன என்பதை அவரின் படங்கள் பேசும். அப்படி கமர்ஷியல் படங்களாக வெளிவந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி ஸ்டைலில் படமாக்கியவர் பாலுமகேந்திரா. இந்த இயக்குநர் ஏன் கமர்சியல் படம் எடுக்க கூடாது என ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டதன் பேரில் பாலு மகேந்திரா இயக்கிய படம் தான் 1984ம் ஆண்டு வெளியான 'நீங்கள் கேட்டவை' திரைப்படம். இன்றுடன் இப்படம் வெளியாகி 39 ஆண்டுகளை கடந்துவிட்டது.
பாலு மகேந்திராவின் திரைமொழி உருவாக்கம் அனைத்துமே மிகவும் வித்தியாசமாக இருக்கும். திரையுலகில் இருந்த பலருக்கும் இவர் என்னடா இது வேற மாறி ஸ்டைலில் படத்தை கொண்டு செல்கிறாரே அதனால் கமர்ஷியல் படங்களை அது பாதித்துவிடும், ஒரு காட்சியையே தொடர்ச்சியாக நான்கு நிமிடத்திற்கு எல்லாம் எடுக்கிறார் இது மற்றவர்களின் ஸ்டைலையும் பாதிக்கக்கூடும் என்பதால் அவரால் கமர்ஷியல் படங்கள் எல்லாம் எடுக்க முடியாது அதனால் தான் அவர் இது போன்ற படங்களை இயக்குகிறார் என விமர்சித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான்கு ஃபைட் சீன், ஐந்து பாடல் இது தானே உங்களின் விருப்பம் என அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக படத்தின் பெயரையும் 'நீங்கள் கேட்டவை' என்றே வைத்து வெளியிட்ட படம் தான் இது.
நடிகர் தியாகராஜன், பானுசந்தர், சில்க் ஸ்மிதா, அர்ச்சனா, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக பட்டி தொட்டி எங்கும் வெற்றி பெற்று வசூலையும் குவித்தது.
ஒரு அம்மா தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அந்த சமயத்தில் அம்மாவை யாரோ வன்கொடுமை கொன்று விடுகிறார்கள். அதற்கு பிறகு மகன்கள் இருவரும் சூழ்நிலையால் பிரிந்து விடுகிறார்கள். அவர்கள் வளர்ந்து பிறகு ஒன்றாக சேர்ந்து அம்மாவின் இறப்புக்கு காரணமாக இருந்த நபரை தேடி கண்டுபிடித்து எப்படி பழி வாங்குகிறார்கள் என்பது தான் படத்தின் கதை.
அந்த காலகட்டத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள். இளையராஜாவின் இசையில் அடியே மனம் நில்லுனா நிக்காதடி, கனவு காணும் வாழ்க்கையாவும், நானே ராஜா, ஓ வசந்த ராஜா, பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா என பல ஜானர்களில் வந்த அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாக வெற்றி பெற்றன. 1984 சமயத்தில் திருமணம், காதுகுத்து, கருமாரி என என்ன நடந்தாலும் 'அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி' என்ற பாடல் தான் அனைத்து இடத்திலும் ஒலித்தது.
பாலு மகேந்திரா - இளையராஜா காம்போ படங்களில் எப்போதுமே ஒரு விதமாக மேஜிக் இருக்கும். அதற்கு சான்று அவர்களின் படங்கள். பாலு மகேந்திரா மொத்தம் 23 படங்கள் இயக்கியுள்ளார் என்றால் அதில் 21 படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். அப்படி அவர்களின் கூட்டணியில் வெளிவந்த இந்த பாடல்கள் என்றுமே பிளே லிஸ்டில் இடம்பெறும் எவர்க்ரீன் பாடல்கள் தான்.
பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இந்த கமர்சியல் படம் வெளியாகி 39 ஆண்டுகளை கடந்த போதிலும் அவரின் நினைவை சுமக்கும் ஒரு சித்திரம்.