தமிழ் சினிமாவில் பிரபலத்தின் உச்சியில் இருக்கும் நடிகரான தளபதி விஜய் இன்றுடன் சினிமாவில் அடியெடுத்து வைத்து 30  ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் முதன் முதலாக சினிமாவில் ஒரு ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் 'நாளைய தீர்ப்பு'. அப்படம் வெளியான நாள் இன்று. இந்த தினத்தை '30 இயர்ஸ் ஆஃப் விஜயிசம்'  என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகளவில் உள்ள விஜய் ரசிகர்கள் நடிகர் விஜயை கொண்டாடி வரும் இந்த நாளில் அவரின் மோசமான காலத்தையும் பற்றி தெரிந்து கொள்ளலாம். 



அறிமுகமே பிளாப் :


குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு ஹீரோவாக தந்தை எஸ்.ஏ சந்திரசேகரின் இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தில் நடித்திருந்தார். அறிமுகமான முதல் படமே படு தோல்வி திரைப்படமாக அமைந்த என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதற்கு முக்கியமான காரணம் படத்தின் அதிரடியான திரைக்கதை. இப்படி அடுத்தடுத்து விஜய் நடித்த பல மசாலா படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அவரை ரசிகர்கள் மனதில் நிலை நிறுத்தி வைத்து 'பூவே உனக்காக', 'ஒன்ஸ்மோர்' 'காதலுக்கு மரியாதை' போன்ற திரைப்படங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சில படங்கள் அவரின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளினாலும் இன்று அவரின் சக்சஸ் ரேஷியோவே வேற லெவல்தான். 






இடம் ஒதுக்கவில்லை :


2013ம் ஆண்டு இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரஜினி, கமல், அஜித், விக்ரம், சூர்யா என சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்ட அந்த விழாவில் நடிகர் விஜய்க்கு பிரபலங்களின் வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை. பார்வையாளர்களின் இருக்கைக்கு முன் இருக்கும் வரிசையில்  அமர்த்தப்பட்டார்.


மோதல் :


2011ம் ஆண்டு அ.தி.மு.கவிற்கு ஆதரவாக விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். அதற்காக 50 தொகுதிகளில் விஜய் ரசிகர்கள் தீயாக வேலை செய்தனர். அந்த தேர்தலில் 43 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி அமோகமான வெற்றியை பெற்றது. அந்த சமயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயலலிதா முதலமைச்சராவதற்கு நான் ஒரு அணிலாக உதவியதில் மகிழ்ச்சி என தெரிவித்து இருந்தார்.அதுவும்சறுக்கல்.


தோல்வியில் சுருண்ட தலைவா :


2012ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன், துப்பாக்கி என இரண்டு திரைப்படங்களும் மெகா பிளாக் பஸ்டர் திரைப்படங்களாக 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றாலும் அதனை தொடர்ந்து வெளியான 'தலைவா' திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி சின்னா பின்னமாக விமர்சனங்களை குவித்து கடைசியில் ஓடாத ஒரு படம் என்று முத்திரை குத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.   


தோற்றத்தை விமர்சித்த பத்திரிகை :


நடிகர் விஜய் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் பல வருடங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் பற்றிய கடுமையான விமர்சனம் குறித்து கூறியிருந்தார். "விஜயின் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு முன்னணி பத்திரிகை அவரை தகர டப்பா மூஞ்சி என மிகவும் கடுமையான வார்த்தையால் விமர்சித்து இருந்தது. இது போன்ற விமர்சனங்கள் அதிலும் ஆரம்பத்தில் ஒருவரின் தோற்றத்தை பற்றி யாராவது அவதூறாக பேசினால் எந்த ஒரு நடிகராக இருந்தாலும் மனம் தளர்ந்து தான் போகும். இதை தெரிந்துகொண்ட விஜய் ஒரு இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது".


இப்படி எல்லாம் அவமானங்களை சந்தித்தவர் நடிகர் விஜய். தனது விடாமுயற்சியால் விஸ்வரூபம் எடுத்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் ரசிகர்கள் மனதில் கொண்டாடும் ஒரு நடிகராகவும் 30 ஆண்டுகளாக ஹீரோவாக 65 திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக இருந்து ஜொலித்து வருகிறார்.