தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தனது சினிமா வாழ்கையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். சாதரண மெக்கானிக்காக தனது வாழ்கை பயணத்தை தொடங்கிய அஜித் இன்று அடைந்திருக்கும் உயரம் நிச்சயம் அசாத்தியமானது.


தான் வளர்ந்து வந்த ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விமர்சனங்களை எதிர்கொண்ட அஜித், அண்மையில் வெளியான  ‘வலிமை’ படத்தில் விமர்சன ரீதியாக தனிமனித தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மேனஜர் சுரேஷ் சந்திரா “ நாணயத்திற்கு மூன்று பக்கம். ரசிகர்களிடம் இருந்து அன்பையும், வெறுப்பவர்களிடம் இருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களிடம் இருந்து விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். வாழு வாழ விடு” என்று அஜித் முன்பு கொடுத்த அறிக்கையை மீண்டும் ஷேர் செய்திருக்கிறார். இந்த நிலையில் அஜித் தனது 30 வருட சினிமா வாழ்கையில் செய்த சில Thug Life சம்பவங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 


மருத்துவமனை படுக்கையில் எடுத்த முடிவு: 


அஜித்தின் 25 ஆவது படமாக வெளியான திரைப்படம் ‘அமர்க்களம்’.  ‘காதல் மன்னன்’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சரணுடன் இணைந்திருந்த சமயம் அது.  25 வது படம் என்பதையும் தாண்டி, அஜித் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற வேண்டும் என முடிவெடுத்த தருணமும் கூட. ஆனால் இதில் ஹைலைட் என்னவென்றால் அவர், அந்த முடிவை எடுத்தது அப்பல்லோ மருத்துவமனை பெட்டில்.




ஆம்,அறுவைசிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்திற்கு அறுவைசிகிச்சை செய்து பெட்டில் கிடத்தியிருக்கிறார்கள். சிகிச்சைக்காக போடப்பட்ட ஊசியால், அஜித்திற்கு கழுத்துக்கு கீழ் எல்லாம் மரத்தும் போயி இருந்தது. அப்போது அங்கு வந்த இயக்குநர் சரணிடம் ஒரு ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க நான் வந்து விடுகிறேன் என்றார் அஜித். அப்படித்தான் அமர்க்களம் படம் உருவானது. அஜித்தில் வாழ்கையில் இன்றும் மைல்ஸ் ஸ்டோனாக பார்க்கப்படும் அந்த படத்தை பற்றி பேசும்போதெல்லாம் சரண் இதைப்பற்றி பேசி சிலாகிப்பார்.


ரசிகர் மன்றம் கலைப்பு


இன்று அஜித்தை பார்ப்பதே மிகப் பெரிய அதிசியமாக இருக்கிறது. ஆனால் ரசிகர் மன்றத்தை கலைக்கும் முன் அஜித் அப்படியில்லை. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதியில் உள்ள ரசிகர் மன்றத்தினரை சந்திப்பது வழக்கம். இதற்காக மண்பம் ஒன்றும் ரெடி செய்யப்பட்டு, அங்கு வரும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.ஆனால் அந்த நடைமுறையை மாற்ற வைத்தது அவரது ரசிகர்கள் செயல்பாடு.




 


ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அஜித் ரசிகர்கள் அவரது வீட்டின் முன் கூடுவது வழக்கம்.  அப்போது வெளியே வரும் அஜித் அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொள்வார். அப்படி ஒரு பிறந்த நாளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே ரசிகர்கள் கூட, அஜித் வர தாமதமாகி விட்டது. இதனை அவரது ரசிகர்கள் கடிந்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே என்ற நினைத்து மனம் வருந்தினார் அஜித். அதே போல மன்றத்தைச் சேர்ந்த சிலர், மன்ற கொடியுடன் அரசியல் கட்சி பிரசாரங்களில் கலந்துகொண்டனர். இதுவும் அவரை மிகவும் பாதித்து விட்டது. இதையடுத்துதான் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி ரசிகர் மன்ற கலைப்பு என்ற அதிரடி முடிவை எடுத்தார் அஜித்


அப்போது அன்று அவர் வெளியிட்ட அறிக்கை: -



வணக்கம் பல,



’அமராவதி’ திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் ’மங்காத்தா’ 50-வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தாருக்கும் இந்த அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 


நீண்ட நாட்களாகவே என்னைச் சிந்திக்க வைத்த ஒரு கருத்தைச் சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நான் என்றுமே ரசிகர்களை, எனது சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால், அதற்கு ஆதரவு தரவும்- சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தைக் கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை, பார்க்கவும் மாட்டேன். 


கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள், என் எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறேன். நலத் திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும்போதும் என்பதே என் கருத்து.


வரும் மே மாதம் 1 ஆம் தேதி எனது நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை என் முடிவாக அறிவிக்கிறேன். இன்றுமுதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன். மாறிவரும் காலகட்டத்தில் பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில்கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் கவுரவும் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவளிக்கும் என உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.


அஜித்குமார்.



முன்னாள் முதல்வர் பாராட்டு விழாவில் ஆக்ரோஷமாக பேசிய அஜித். 


முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடந்த 2010 ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஒட்டுமொத்த திரையுலகமே கலந்துகொண்டது. விஜயும் சூர்யாவும் மேடையில் நிற்க, ஒட்டுமொத்த திரையுலமே அஜித்தின் முன்னால் இருக்கிறது. 


 



அப்போது மேடையில்  மைக்கைப்பிடித்த அஜித், “ இது போன்ற அரசியல் விழாவிற்கு எங்களை கட்டாயப்படுத்தி மிரட்டி வரவழைக்கிறார்கள். எங்களுக்கு அரசியல் வேண்டாம் அய்யா. எங்களை  நடிக்க விடுங்கள். சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக ஆக்க வேண்டாம். இதற்காக ஒரு நல்ல முடிவை எடுங்க அய்யா” என்று பேசினார். இதைக்கேட்ட நடிகர் ரஜினி, எழுந்து நின்று கை தட்டி பாராட்ட, அந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  


தல என்று அழைக்க வேண்டாம்


தீனா படத்தில் அஜித்திற்கு தல என்ற அடைமொழி கிடைத்தது. அதிலிருந்து அவரது ரசிகர்கள் அவரை தல என்றே அழைத்து வந்தார்கள். இந்த நிலையில் திடிரென்று அப்படி என்னை அழைக்க வேண்டாம் என்று அறிவித்தார் அஜித்.


இது குறித்து அஜித் வெளியிட்ட அறிக்கையில்


 “இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.


அன்புடன்
அஜித்குமார்.” என்று பதிவிட்டார். 


 


பொதுவெளியில் கோபப்பட்ட அஜித் 


தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் அஜித் திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளிக்கு வாக்கு சாவடிக்கு வந்தார். அஜித்தின் காரை பார்த்ததும், அவரை சூழ்ந்து கொண்டனர். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து நுழைவு வாயிலிருந்து அவரை பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர்.




அப்போது ரசிகர்கள் பலர் நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுக்க போட்டிபோட்டனர். அப்போது ரசிகர் ஒருவர் அஜித்தை ஃபேஸ்புக் நேரலை செய்தார். இதனால் எரிச்சலடைந்த நடிகர் அஜித் அவரின் செல்போனை கோபமாக பறித்தார். தொடர்ந்து சுற்றி இருந்த ரசிகர்களை அங்கிருந்து கிளம்புங்கள் என்று சைகையால் கூறினார். பின்னர் சிறுது நேரம் கழித்து அவரது மொபைலை அவரிடம் கொடுத்து இனி இப்படி நடந்துகொள்ள கூடாது என எச்சரித்து அனுப்பிவைத்தார்.